பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கை ஒரு தொடர்கதை. நேற்று நிகழ்ந்தனவற்றை ஆராய்ந்து அறிந்து கொண்டால்தான் எதிர்காலத்திற்குத் திட்டமிட முடியும். சென்றகால நிகழ்வுகள் நல்லனவாக அமைந்து நல்லன விளைந்திருந்தாலும் அந்த நன்மையின் தரத்தினை மேலும் மேலும் உயர்த்த வேண்டும். ஒரு நன்மை கூடத் தொடர்ந்து கண்காணிக்கப் பெற்று மேலும் மேலும் செழித்த நன்மையாக வளர்க்கப் பெறாது போனால் ஒரு தேக்கம் உருவாகும்! ஒரு சூன்யம் தோன்றும். பின் அந்த நன்மையும் கூட வளர்ச்சியின்மையின் காரணமாகத் தீமையாக மாறிவிடுதலும் உண்டு. ஆதலால், சென்றகால நிகழ்வுகளின் நன்மையை மேலும் மேலும் செழிப்படையச் செய்யவேண்டுமானால் ஆனதறிதலைத் தொடர்ந்து ஆவதறிதலும் வேண்டும்.

நன்மையே செய்தாலும் செய்யும் நன்மைகளனைத்தும் நன்மை என்ற காரணத்தினால் வெற்றி பெற்று விடுவதில்லை. மானிட வரலாற்றில் தீமைகள் வெற்றி பெற்ற அளவுக்கு நன்மைகள் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தீமைகள் பெற்ற வெற்றி நிலையானதன்று. பாரதி கூறியாங்கு,

"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்"

ஆனாலும் நன்மை செய்ததிலிருந்து இடர்ப்பாடுகளை அல்லது ஏற்பட்ட தோல்விகளை ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் ஆனது அறிதலாகும்; பட்டறிவுமாகும். இந்த அறிவைப் பெறுவதால் நாம் தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். ஆனது அறிதலினும் ஆவதறியும் முனைப்பு மிகுதியாகத் தேவை. ஆவது அறிகின்ற அறிவு இல்லாமல் ஆனது அறிகின்ற அறிவுமட்டுமே பெற்றிருந்தால் வாழ்க்கையில் துன்பமே மேலிடும்; கவலையே மிகும். இத்தகையோர் சென்ற காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பர்; புத்துணர்வு கொள்ளார்; புதிய அறிவினையும் பெறார். புத்துழைப்பினையும் இவர்களிடத்தில் கான