பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளரும்! அடுத்து உன்னைச் சந்திக்கும் பொழுது உழைப்பு வேள்வியில் காண வேண்டும். இது நமது விருப்பம்.

இன்பஅன்பு
அடிகளார்
5. அசைவிலா ஊக்கம்

இனிய தமிழ்ச் செல்வ!

ஆள்வினையில் ஈடுபடுதலுக்கு உள்ளத்தின்கண் ஊக்கம் என்ற எழுச்சிதேவை! உயிரியல்பு ஊக்கமுடையராதல். ஊக்கம் என்பது உள்ளத்திலிருந்து முகிழ்ப்பது; எழுவது! மானுட வாழ்க்கையின் வெற்றிக்கு மூலமுதல் ஊக்கமேயாம்! கோழி குஞ்சு, முட்டைக்குள் கருவாக வளர்கிறது. பின் முட்டையை உடைத்துக் கொண்டு வெளி வருகிறது. முட்டையின் ஒடு தானாக உடைவதில்லை. இயற்கையின் நிகழ்வுமல்ல. முட்டைக்குள் உள்ள கரு, முட்டைக்குள் முடங்கிக் கிடப்பதை இடர்ப்பாடாகக் கருதுகிறது. முட்டையிலிருந்து வெளியே வர - விடுதலைபெற எண்ணுகிறது! முட்டையின் ஒட்டை மோதுகிறது! குஞ்சுவின் ஊக்கம் நிறைந்த மோதலிலேயே முட்டை உடைகிறது! வீரம் செறிந்த களிறு அம்புகளைத் தாங்கிய வண்ணம் போரிடும். ஊக்கம் செறிந்த எருது முழுமூச்சுடன் சுமையை இழுக்கும்.

இனிய தமிழ்ச் செல்வ! நம்முடைய துன்பம் எளிதில் நீங்காது! அதுவும் நம்முடைய நாட்டின் வறுமை எளிதில் நீங்காது! இருபத்தி ஓராம் நூற்றாண்டிற்குச் செல்வது நாமா? அல்லது இருபத்து ஓராம் நூற்றாண்டு நம்மை நோக்கி வந்து விடுமா? நம்மைப்பார்த்தால், இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு போகிறவர்களாகத் தெரியவில்லை. நம்முடைய நடைமுறை அப்படியில்லையே! செல்வ! உனக்கு கோபம் வருகிறது! கோபம் வந்து பயன் என்ன? சுரணை வந்தால் சரி! நம்மை வருத்தும் வறுமைக்கு வயது 2,400 ஆண்டுகள்!