பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



261


இது நமக்குத் தெரிந்த கால எல்லை! அதற்கு அப்பாலும் இருக்கலாம்! ஆம், புறநானூற்றுப் பசிப்பிணி மருத்துவன் பண்ணன் முதலாக இந்தத் தலைமுறையில் சத்துணவு நாயகர் காலம் வரையில் சிந்தித்துப்பார்! வறுமையை எதிர்த்திடும் ஊக்கத்துடன் கூடிய முயற்சியைக் காணோம்! கைகளின் வழிதான் வயிற்றுக்குச் சோறு! இதுவே நியதி!

செல்வ, நீ என்ன நினைக்கிறாய் என்பது புரிகிறது! எல்லாரும் கையினால் தானே உண்கிறார்கள் என்று நினைக்கிறாய்! நான் நினைத்துச் சொல்வது இதை விட ஆழமானது! இரண்டு கைகளால் உழைப்பினாலேயே வயிற்றுக்கு உணவும், அறிபவனுக்கு அறிவும் கிடைத்திடச் செய்தல் வேண்டும். 'கை' என்ற சொல்லுக்கே உழைப்பு என்று பொருள் உண்டு. ஆம்! நமக்கு ஊக்கம் தேவை! இன்று பொழுது போச்சு என்ற அவலப்பிழைப்பு ஆகாது! கூலியும் பிழைப்பும் நமது குறிக்கோளாகிவிடக் கூடாது! இல்லை, இல்லை-இவை வேண்டும். வாழ்க்கைக்குத் தேவை! ஆனால் இவை குறிக்கோள் ஆகா! சாலைகளும் ஊர்திகளும் பயணத்திற்குத் துணை செய்வனவேயாம். இது முதல்நிலை. பயணங்கள் மேற்கொண்டு ஒருவர் ஒரு ஊரை அடைதலும் குறிக்கோள் ஆகாது இஃது இரண்டாம் நிலை. பயணத்தின் குறிக்கோள் யாது? உறவுகளைப் பேணிவளர்த்தல்! பொருளீட்டுதல்! புதியன கற்றறிதல்! இவை போல்வனவே குறிக்கோள்கள்! இக்குறிக்கோள்களை அடையும் ஊக்கமே ஊக்கம்! இந்த ஊக்கமும் அசைவிலா-ஊக்கமாக அமைதல் வேண்டும்.

இனிய செல்வ, ஆக்கத்திற்கு இடர்ப்பாடுகள் மிகுதி! ஊக்கம் நிறைந்த வாழ்க்கையில் குறுக்குச் சால்கள் மிகுதி! முதல் தடை உடல் களைத்துக் காட்டும்; சுகம் தேடும். இரண்டாம் நிலை இயற்கையினால் விளையும் கேடுகள்; பருவ காலக் குளறுபடிகள்! மூன்றாவது நம்முடைய சமூக அமைப்பின் காரணமாக விளையும் தடைகள்! நான்காவது பழைய நம்பிக்கைகள் அடிப்படையில் வரும் உணர்வுக்