பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோளாறுகள்! ஆட்சியாளரால் வரும் தடைகள்! இன்னும் ஆயிரம் ஆயிரம் தடைகள்! இவைகளால் தாக்கப்படும்போது ஊக்கம் தளரும். ஆனால் தளரக்கூடாது! அசைவிலா ஊக்கமே வாழ்வாங்கு வாழத் தேவை, வையகம் செழிக்கத் தேவை! இனிய செல்வ! அசைவிலா ஊக்கம் பெறுக! உலகம் உனதாகும்!

இன்ப அன்பு
அடிகளார்
6. தாய்மொழிவழிக் கல்வி-1

சென்ற கடிதத்தில் ஆக்கத்திற்கு ஊக்கம் தேவை என்பது பற்றி எழுதியிருந்தோம். ஆக்கம் ஒன்றல்ல; பலப்பல. வாழ்வின் ஆக்கம் ஒரு துறையில் வந்து அமைந்துவிடா. பல்வேறு துறைகளிலும் ஆக்கம் தேடவேண்டும். நம்முடைய ஆக்கத்திற்குரியவாறு கல்வி கற்கவேண்டும். அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிக்கு மொழிகள் தடையாக இருத்தல் கூடாது.

இனிய செல்வ, ஒவ்வொருவருக்கும் தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்து வளரும் நீயும் உனது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோரும் நமது அன்னை மொழி தமிழின்மூலம் அறிவியலைக் கற்க வேண்டும்; தொழிலியலைக் கற்க வேண்டும். தாய்மொழி வழியாகக் கற்கும் கல்விதான் ஆழப்படும். உண்மையில் அறிவாக உருப்பெறும். ஏன்? தாய் மொழிப் பயிற்சி வீட்டிலிருந்து தொடங்குகிறது. பேசவும் பயிலவும் தொடங்கும் நாள் முதல் தொடங்குகிறது. வீடும் வீதியும் நாடும் நகரமும் தாய்மொழிப் பயிற்சியைத் தருவனவாம். அதனால் தாய் மொழியில் சிந்திப்பதும் தாய் மொழியில் இலக்கணப் பிழையின்றி எழுதுவதிலும் பேசுவதிலும் எளிதில் பயிற்சி பெற முடிகிறது. இயற்கையிலேயே பயிற்சி அமைந்து விடுகிறது. அதனால் பொருட் சார்பான சிந்தனை, கல்வி, ஆய்வு ஆகியன