பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



263


தடையின்றி வளரமுடிகிறது. அதனால் உலகமாந்தர் அனைவரும் அனைத்துக் கலைக்கும் தாய் மொழியே பயிற்று மொழி என்று ஒருமுகமாகக் கூறுகின்றனர். ஆனால் நம்முடைய நாட்டில் "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று முழக்கமிடும் நாட்டில் தமிழ் பயிற்றுமொழி இயக்கம் வெற்றி பெறவில்லை, ருசியமொழி, சீன மொழி, சப்பானிய மொழி, இந்தி மொழி ஆகிய மொழிகள் அவ்வவ்வினங்களிடையில் பயிற்று மொழியாகி அந்தந்த நாடுகள் வளர்ந்து வருகின்றன. அந்தந்த மொழி பேசும் மக்களும் நாளும் வளர்ந்து வருகின்றனர். ஆனால், நமது நிலை என்ன? ஆங்கிலமின்றேல் அழிந்து போவோம் என்று கருதுகின்றோம். ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக - நூற்றுக் கணக்கில் தமிழ்நாட்டில் காளான்கள் போலப் பல்கிப் பெருகி வளர்ந்து வந்துள்ளன. ஏன் இந்த அவலம்?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் சிறப்புடைய இலக்கிய இலக்கண வளம் மிகுதியும் பெற்ற நமது தாய்மொழி அறிவியல் பயிற்சிக்குத் தகுதியற்றதா? பொறியியல் பயிற்சிக்குத் தகுதியற்றதா? அல்லது நாம் தான் தகுதியற்றவர்களாகி விட்டோமா? இனிய செல்வ, அன்பு கூர்ந்து சிந்தனை செய்! இந்தச் சூழ் நிலையில் நடுவணரசு, மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளைத் திறக்கப் போவதாகச் செய்தி! ஆம்! தொடக்கக் காலத்தில் ஆங்கிலமும் இந்தியும் மாதிரிப் பள்ளிகளில் பயிற்றுமொழிகள் என்று நடுவணரசு அறிவித்தது. தமிழ் நாட்டில் தமிழ்க் குழந்தைகளை ஆங்கிலம், இந்தி படிப்பிப்பதற்காகப் பள்ளிகளைத் திறப்பானேன்? நடுவணரசுக்கு இந்தி மட்டும் தான் சொந்த மொழியா? அல்லது ஆங்கிலம் தான் தாய் மொழியா? இனிய செல்வ, உண்மையைச் சொல்லப் போனால் ஆங்கிலம் இந்திய நாட்டு மொழிப் பட்டியலிலேயே இல்லை. நடுவணரசுக்கு நமது தாய் மொழியாகிய தமிழை வளர்க்கும் பொறுப்பும் உண்டு, ஆதலால், மாதிரிப் பள்ளிகளில் தமிழையே பயிற்று