பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



267



இனிய செல்வ, நேரு பெருமகனாரின் உறுதிமொழி இந்தி பேசாத மாநிலங்களைக் குறித்தது. இன்று இந்தி பேசாத மாநிலங்களின் நிலை என்ன? தமிழ் நாட்டைத் தவிர அனைத்து மாநில மக்களும் மூன்று மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டு மூன்றாவது மொழியாக இந்தியைத் தொடர்ந்து கற்று வருகின்றனர். இந்தச் சூழ் நிலையில் நமது நிலை என்ன? இனிய செல்வ, அது மட்டுமல்ல! ஓர் உண்மை உனக்கு தெரியாமல் இருக்க முடியாது. அதாவது தமிழ் நாட்டிலும் உலகியல் தெரிந்து தெளிந்த உயர்குடியினர் - எதிரதாக் காக்கும் உயர் குடியினர் இன்று இந்தியைக் கற்கத் தொடங்கிவிட்டனர். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி கற்று வருகின்றனர். பின் தங்கிய நமது சமூகம் தான் இந்த மொழிச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. நமது நிலையில் தாய்மொழி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலவில்லை.

ஆங்கிலம் கற்க வேண்டிய ஒரு மொழியேயாம். இதில் இரண்டு கருத்து இருக்க இடமில்லை. ஆனால், ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கத் தகுதியற்றது. ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடிப்பதால் தமிழர்கள் அறிஞர்களாக முடியாமல் தடை செய்கிறது. இன்றைய நிலையில் ஆங்கிலம் வாயிலாகப் பயிற்றும் கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு முற்றாகத் தடை. இனிய செல்வ, இது தமிழ் நாட்டில் தொடர்ந்து உயர் குடியினராக ஒரு சிலரையும் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பலரையும் ஆக்குகிறது. இது வரவேற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும் கூட எண்பது விழுக்காட்டு மக்களுக்கு ஆங்கிலம் ஒரு புதிய மொழியேயாம். உலக நாடுகளிலும் ஆங்கிலம், கற்போர் சிலரே! அதுவும் ஆய்வுக்காகக் கற்பதேயாம். இங்கிலாந்து, இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகள், காமன் வெல்த் நாடுகள் அமெரிக்கா முதலியவைகளில் மட்டுமே ஆங்கிலப் புழக்கம்!