பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழ் நாட்டில் தமிழ் துறைதோறும் இடம் பெற வளர-திட்டமிடுதல் வேண்டும். காலவரையறைக்குட்பட்ட திட்டம் தேவை. தமிழகத்திலேயே பயிற்று மொழியில் தமிழுக்குரிய இடத்தை ஆங்கிலம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றித் தமிழுக்கு மீட்டுத் தரவேண்டும். அதுபோலவே தமிழ் நாட்டு அரசின் அனைத்துத் துறையிலும் தமிழே ஆட்சி மொழி என்று நடைமுறைப்படுத்தவேண்டும். தமிழ் மூலம் பயின்றோர் பட்டம் பெற்றோர் தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் அமர்தல் வேண்டும். இவை நடந்தாலே தமிழ் வளரும். அவ்வழி நடுவணரசின் ஆட்சிமொழியாதலுக்குரிய சூழ்நிலையைத் தமிழுக்கு வழங்க இயலும். இவை பற்றிய சிந்தனைகள் தென்படவில்லை.

இனிய செல்வ, அடுத்து இந்தி ஆட்சி மொழியாதல் மட்டுமே நோக்கமன்று. அஃது ஒரு பொது மொழியாக பொது உறவு மொழியாக விளங்கவேண்டும் என்பது நடுவண் அரசின் கொள்கை. இந்தப் பொதுமொழி உறவு மொழி குறித்துத் தமிழ்நாடு அரசின் கருத்து என்ன என்பது தெளிவாகத் தெரிதல் நல்லது. அவசியமும் கூட:

இனிய செல்வ, தமிழ், நடுவணரசின் ஆட்சி மொழியானால் நாட்டளவில் ஆங்கிலத்திற்குரிய இடம் என்ன? அஃது ஒரு மொழியாகக் கற்கப் படுமா? அல்லது கை விடப்படுமா? இனிய செல்வ, மேலும் ஒரு சிக்கல் உள்ளது. இந்தியா, ஒரு துணைக் கண்டம். பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியே ஆட்சி மொழி. தமிழ் மக்கள் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை விரும்பி ஏற்காது போனால் அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதும் வாழ்வதும் பாதிக்கும். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் பற்றி எண்ண வேண்டியிருக்கிறது.