பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழியிலேயே எழுதலாம் என்ற முடிவு! அமரர் அறிஞர் அண்ணா அவர்கள் கருத்து மைய அரசின் தேர்வுகளில் இந்தியைத் தாய்மொழியாகவுடைய மாணவர்களுடன் மற்ற மாநில மாணவர்கள் போட்டியிட முடியாது என்பதேயாகும். இன்று மைய அரசின் தேர்வுகளை அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம். இந்தி மொழி மாநில இளைஞர்கள் இந்தியிலேயே எழுதுகின்றனர். நமது தமிழ் நாட்டு இளைஞர்களோ ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். தாய் மொழியில் எழுதும் இந்தி மாநில இளைஞர்கள் வெற்றி பெறும் அளவுக்குத் தாய்மொழியல்லாத ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றியைப் பெறமுடிய வில்லையே! ஏன்? தமிழ் நாட்டு இளைஞர்கள் தமிழ் வழி கற்காததே காரணம்! ஆங்கிலம் தாய்மொழியாக அமையாததால் திறமை நிறைவுபெறவில்லை! இதுவே காரணம்.

இனிய செல்வ, இந்தியத் தலைநகரில் எந்த மொழி என்பதை முடிவு செய்வதற்குமுன்பு தமிழ் நாட்டில் எது பயிற்று மொழி? தமிழ் நாட்டில் எது ஆட்சி மொழி? என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவுகளிலிருந்து தான் மைய அரசின் மொழிக் கொள்கையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும்! அவர்களும் ஏற்கத் தக்கதாக முடியும்! இந்தத் திசையில் பாராட்டுதலுக்குரிய கலைஞரும் மாண்புமிகு தமிழக முதல்வரும் சிந்தனை செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மொழி வழிப்பட்ட இயக்கங்கள் உணர்ச்சி பூர்வமானவை. இதற்குத் தீர்வு காண்பதில் நிதானம் மிகுதியும் தேவை. தீர்வு காணும் முயற்சிகளில் மக்களாட்சி மரபுகள் மீறப்படுதல் கூடாது என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும். இனிய செல்வ, அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்