பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


துணையாகச் சேர்க்கிறார். பெரியாரையும் துணையாகச் சேர்த்து விடுகின்றார்! ஆனால், பொருட்பால் இயக்கத்தில்-சமுதாயத்தில் முரண்பட்ட இயல்புகளைக் காண்கின்றார்! பெரியார் துணையை நாடினால் அது கிடைப்பது இல்லை. சிற்றினமே வந்து சேர்கிறது! நல்ல நட்பைநாடினால் தீ நட்பேவந்து பொருந்துகிறது. செங்கோலை நாடி ஓடினால் அது கிடைப்பதில்லை! கொடுங்கோன்மைதான் கிடைக்கிறது! இத்தகு முரண்பாடுகளை திருவள்ளுவர் சிந்திக்கின்றார்! இனிய செல்வ, அதனாலேயே பொருட்பாலின் முடிவு கயமையாயிற்று. கயமை அதிகாரம் திருவள்ளுவரின் மனநிறைவு இன்மையைக் காட்டுகிறது! அது மட்டுமல்ல! திருவள்ளுவருக்கே தாங்க முடியாத ஆற்றாமை மீதுார்கிறது. இதனை,

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஓ மளவுமோர் நோய்"

என்று வெளிப்படுத்துகின்றார். ஆம்! திருவள்ளுவர் சொல்லியும் கேட்கவில்லை! ஆம்! ஆம்! ஆம்! இனிய செல்வ, இதில் உனக்கென்ன ஐயம்! திருவள்ளுவர் சொன்னதை அவர் வாழ்ந்த காலத்திலும் யாரும் கேட்கவில்லை! ஏன் இன்று வரையிலும் கூட யாரும் கேட்கவில்லை! எங்கோ இங்கொருவர் அங்கொருவர் திருக்குறள் கற்றவர்கள் இருக்கலாம்! அவர்களும் திருக்குறளை நம்புகிறார்களா? திருக்குறள் நெறியில் வாழத் தலைப்படுகிறார்களா என்று கேட்பின் இல்லை என்பதே விடை! இனியசெல்வ, திருவள்ளுவர் சொன்னதைத் தான் கேட்க வில்லை. அதிமேதாவிகள்; அவர்கள் தாங்களாகவே பட்டறிவிலிருந்து அறிவு, கொள்முதல் செய்தார்களா? விழுந்த இடத்தில் விழாமல் எழுந்து நடந்தார்களா? அதுவும் இல்லை! இனிய செல்வ, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் இனத்தின் வாழ்க்கையில் ஒரு தேக்கம். நம் முன்னோர் பெற்ற வெற்றிகளைத் தோல்விகளாக்குகின்றனர்.