பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



281


3. அசையாச் சொத்து வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

இந்த நெறிமுறைகளை இன்று யாரும் வரவேற்க மாட்டார்கள். ஏன்? அரசுகூட ஏற்காது! இனிய செல்வ, அடுத்து மீண்டும் எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
13. ஒருமைப்பாட்டு உணர்வு கொள்

இனிய செல்வ!

இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? ஆள்கிற கட்சிகள் எப்படி இருக்கின்றன? எதிர்க்கட்சிகள் எப்படி இருக்கின்றன? வினாக்கள் புரிகின்றனவா? ஆம்! திருக்குறள் நெறிக்கு முற்றிலும் எதிர்நிலையில் இன்றைய நாடு இருக்கிறது.

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு."

என்பது திருக்குறள். ஆம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு பல குழுக்களாகப் பிரிந்து கிடந்தது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிய முட்டுக்கட்டை இந்தக் குழு மனப்பான்மையே! வெளிப்படையாகத் தெரியும் சாதி, குல, கோத்திர மதப்பிரிவினைகள் வேறு. இந்தப் பிரிவினைகள் வழிப்பட்டு, வேறுபட்டு நிற்கும் கூட்டங்கள், குழுக்கள் என்று அழைக்கப்படுவதில்லை! 'பல்குழுக்கள்’ என்று குறிப்பிட்டது ஒரு அணிபோல் தோற்றத்தில் காட்டி, உள்ளே முரண்பட்டுக் கிடக்கும் சக்திகளைக் குழுக்கள் என்று திருக்குறள் இனம் காட்டுகிறது.

இனிய செல்வ! இந்தக் குழுக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றாய். குழுஉ மனப்பான்மையில் ஒதுங்கியும், ஒதுக்கியும் ஒரு சிறு கூட்டம் சேர்ப்பதற்குக் காரணம், வறட்சித்தன்மை மிக்க தலைமை உணர்வே!