பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



283


குழூஉக்களாகப் பிரிந்து உட்பகை கொள்கின்றனர். உட்பகையின் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு பாழ்களை விளைவிக்கின்றனர். இந்த அளவிலும் நிற்பதில்லை, குழூஉ மனப்பான்மை ஆளும் அரசுகளையே கையகப்படுத்திக் கொண்டு ஆட்சி முறைக்குக் கேடு செய்கின்றனர். மக்களாட்சி நடைபெறும் நாட்டில் குழூஉக்கள் தோன்றிவிடின் அரசே நடைபெறாது. அரசையே இந்தக் குழூக்கள் தம்வயப்படுத்தி இயக்க முயலும். ஆக, நாள்தோறும் அதிகாரப் பங்கீடுகள் பற்றிய சர்ச்சையே நடைபெறும். அரசு எந்திரத்தின் உறுப்புக்களாகிய அரசு அலுவலர்கள் திசை தெரியாமல் தவிப்பர். யார் சொல்வதைக் கேட்பது என்ற சங்கடத்திலேயே காரியங்கள் ஒத்திப் போடப்படும் நாட்டில் நிர்வாகமே நடைபெறாது. இத்தகு இரங்கத்தக்க நிலை நமக்கு வேண்டியதுதானா? இனிய செல்வ, எண்ணுக! எண்ணித்துணிக! கூடித் தொழில் செய்க! ஒருமைப்பாடுடையராய் நாட்டு வேள்வி இயற்றுவோமாக! நாட்டின் அரசைக் குழுக்களின் அரசாக மாற்றி மக்களுக்குத் தீங்கு செய்கின்றனர். ஆட்சியும் நிலை குலைகிறது. இன்றைய நமது நாட்டின் நிலையும் இதுவேயாம்.

சிற்றூர்கள் - பேரூர்கள் நலம்பெற பல்குழூஉ மனப்பான்மை அறவே விட்டொழிக்க வேண்டும். எல்லோரும் ஒர் குலமாக - ஓரினமாக - ஓர் நிறையாகக் கூடித் தொழில் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். தலைமைப் பசி வரக்கூடாது! தாழ்வெனும் தன்மையுடன் பணிசெய்தல் வேண்டும். தேவையில்லாமல் கூட்டம் போடக்கூடாது. நமது நாட்டில் கூட்டம் நல்ல பயனை அடையமுடிவதில்லை. ஒரோவழி அபூர்வமான சூழ்நிலைகளிலே நமது நாட்டில் கூட்டம் பயன்தருகிறது.

இனிய செல்வ! குழூஉ மனப்பான்மை தீயது! நாட்டுக்கு ஏற்றது பரந்த ஒருமைப் பாட்டுணர்வேயாம்! இனிய செல்வ, சின்னச் சின்னக் கூட்டம் வேண்டாம். சிறு பிள்ளைத்தனம் வேண்டாம். இனிய செல்வ, ஆன்மநேய