பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றே கொள்ள வேண்டும். தண்ணிரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால் திருவள்ளுவர் "நீரின்றமையாது உலகு" என்றார்.

உலகின் அனைத்துப் பொருள்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர்கலவாத-நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம்முடைய மானிட உடம்பில்கூட 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அது மட்டுமல்ல. பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் அழுக்குகளை நீக்கித் தூய்மை செய்வதற்குத் தண்ணிரே பயன்படுகிறது. இந்த உலகம் தண்ணீர் மயம்.

"நீரின்றமையாது உலகு" - என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியதை உற்று நோக்குக. ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல்நலம் பாதுகாப்பதற்குத் தட்ப வெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளைச் சீராக இயக்க நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால்தான் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழையேயாம். அதனால் "வானின்று அமையாது ஒழுக்கு" என்றார் திருவள்ளுவர்.

நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙணம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது; உயிர்க் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக் கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால் வான் நின்று மழை பொழிய வேண்டும். வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின் நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூடக் காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புல் அல்ல,