பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சாதிகளைப் பற்றி எண்ணி நினைத்துப் பார்க்கக்கூட இந்த மக்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. சாதீய அமைப்புகள், சங்கங்கள் தடை செய்யப்படவேண்டும்.

இந்த நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அனைத்துரிமைகளுக்கும் உரியவர்கள் ஆயினும் கல்வியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குச் சில தனிச் சலுகைகள் வழங்க வேண்டியது, தவிர்க்க இயலாதது. இதற்கு அளவுகோல் பிறந்த சாதியல்ல! பின் தங்கிய நிலையே என்பதனை உறுதியாக்க வேண்டும். இங்ங்ணமின்றி மீண்டும் மீண்டும் "சாதிகளை ஒழிப்போம்; வகுப்பு வாதங்களை முறியடிப்போம்” என்று கூறிக்கொண்டே சாதிகளை வளர்க்கும் முறைகளைப் பேணி வளர்ப்பது முற்றிலும் முறையான செயலன்று. பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு என்று ஏற்படுத்திய சலுகைகள், உதவிகள் நமது நல்லூழின்மையால் "சாதிகளைக் காப்பாற்றுபவைகளாக" மாறிவிட்டன. செல்வ! இனியும் பொறுத்தாற்ற என்ன இருக்கிறது? உடனடியாக சிந்தித்து,

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை."

என்ற குறளை ஒரு நூறு தரம் சிந்தித்துச் செயற்படுதல் நன்று.

இன்ப அன்பு
அடிகளார்
16. நுனிமரம் ஏறி அடிமரம் வெட்டற்க

இனிய செல்வ!

திருக்குறள் தோன்றிய காலம், பலர் கருதுவது போன்று பொற்காலமன்று. திருக்குறள் தோன்றிய காலத்திலும் நமது சமுதாயம் இன்றிருப்பதைப் போலத்தான் தரமிழந்த நிலையில் இருந்திருக்கிறது. தரமிழந்த நிலையில் கிடந்த சமுதாயத்தைத் தரத்திலும் தகுதியிலும் வளர்த்து உயர்த்தவே