பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, ஒரு சிறு சுவையான நிகழ்ச்சி! நேற்று முன்தினம், சீரகச் சுடுநீர் குடிக்க வேண்டிய நேரத்தில் கொண்டு வந்து தந்தனர். அது, குறுகலான வடிவமைப்புடைய குவளையில் இருந்தது. உடன் அவசர நிலையில் சூட்டோடு குடிக்க இயலவில்லை. அந்தச் சுடுநீரை ஒரு சிறிய தாம்பாளத்தில் ஊற்றினோம். ஆறிவிட்டது! இதிலிருந்து என்ன புரிகிறது? குறுகிய மனப்போக்குடையவர்கள் எளிதில் சினம் தணியார்கள்; மாற மாட்டார்கள். இதுதானே உண்மை. ஒருவர் கருத்தைப் பிறிதொருவர் ஏற்கும் வண்ணம் எடுத்துக்கூறி ஏற்கவைத்தலே மக்களாட்சிப் பண்பு. அது போலவே மற்றவர் கருத்தைத் தன் கருத்துப்போலவே எடுத்தாய்வு செய்து ஏற்கக் கூடியதானால் ஏற்பதும் கடமை. மக்களாட்சி முறைக்கு "ஏற்புமுறை” தலையாயது; இன்றியமையாதது. இசைவான ஏற்பு பெறும்வரை அறிவார்ந்த நிலையில் கலந்து பேசுதலே வாழ்வியல்.

இனிய செல்வ, நமது திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றியது. ஆயினும் மக்களாட்சிமுறைத் தாக்கம் மிகுதியும் திருக்குறளில் உண்டு. அடியிற் கண்டுள்ள திருக்குறள்களைப் படித்துப்பார்:

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

(118)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(448)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

(517)

என்ற திருக்குறள்கள், மக்களாட்சியில் ஈடுபடும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் கற்றுத் தெளிய வேண்டியவை, இனிய செல்வ,