பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



19


முளைத்தெழும்புல் என்பதை "பசும்புல் தலை" என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால் நிலத்தில் பசும்புல் தலை இல்லை! ஏன்?

நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்றப் பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன. இந்த மண் காற்றினால் தூசியாகப் பறந்து போய்விடாமல் நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மண் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணிர் வேகமாக - ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மண் பரப்பு அழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணிரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

"விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது"

(16)

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதைப் மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.