பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


20. பொதுத்துறை பேணுக!

இனிய செல்வ;

உனக்கு வேதனை தரக்கூடிய செய்தி ஒன்றினை எழுத நேரிட்டிருக்கிறது. வருத்தப்படாதே! செயல் செய்யத் துணிந்து நில்! வறுமையை எதிர்த்துப் போராடும் களமாக வாழ்க்கையை ஆக்குக!

இனிய செல்வ,

மானுடம் உய்வதற்காக அளிக்கப் பெற்ற இந்தப் பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் 24 பேர் பட்டினியால் உணவின்றிச் செத்து மடிகின்றனர். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் உண்டும் - உண்ணாமலும் பசியால் வாடுகின்றனர். இனிய செல்வ, எப்படி இருக்கிறது நமது உலகம், பார்த்தாயா? சற்றுப் பொறு! நமது நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள். நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் 27.1 கோடி மக்கள் வாழ்கின்றனர். இந்தத் தகவல் நமது நாடாளுமன்றத்தில் திட்ட அமைச்சரால் தரப்பெற்ற செய்தி (indian Express-25.3.88). வறுமைக்கோடு என்றால் என்ன என்று கேட்கிறாயா? உயிர்வாழ்வதற்குரிய உணவு கிடைக்காதது வறுமைக் கோடு. இனிய செல்வ, இந்தியாவில் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். என்ன மனச் சங்கடப்படுகிறாயா? ஆம்! நீ சொல்வதிலும் ஒருவகையில் உண்மை இருக்கவே செய்கிறது.

விஞ்ஞானம் வளர்கிறது! தொழிற்புரட்சி வளர்ந்து வந்துள்ளது. கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறுகின்றன. கோயில் திருவிழாக்களுடன் போட்டி போடும் வகையில் அரசியல் ஆரவார விழாக்கள்! இவ்வளவுக்கும் மத்தியில் வறுமை வளர்கிறது. இனிய செல்வ, இன்னும் ஒரு வேடிக்கை கேள்! சிரிக்க முடிந்தால் சிரிப்பாயாக! நமது நாட்டில் தனிநபரின் சராசரி வருமானம் ரூ. 56, 64 ஆம்!