பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



301


மாட்சிமைமிக்க இந்தியக் குடிமகன் உடல் தேய உழைத்து ஈட்டும் சராசரி வருமானம் மாதம் ரூ 56, 64 இனிய செல்வ, இதிலும் ஒரு வேடிக்கை! இல்லை விநோதம்! இந்தச் சராசரி வருமானக் கணக்கில் பலநூறு கோடி ஈட்டுகின்ற முதலாளிகளின் வருவாயும் சேர்ந்திருக்கிறது என்பதை மறந்து விடாதே! இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நாம் இருப்பது நாடா? அல்லது வேட்டைக்காரர்கள் வாழும் காடா? என்று கேட்கத் தோன்றுகிறது!

நமது திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வறுமையைத் திட்டுகிறார். வறுமையைப் "பாவி' என்று திட்டுகிறார்.

"இன்மை யெனஒரு பாவி மறுமையும்
 இம்மையும் இன்றி வரும்”

என்பது திருக்குறள். ஆம்! இனிய செல்வ, மதத் தலைவர்கள், மதப்புரோகிதர்கள், எல்லோரும் சேர்ந்து செத்தபிறகு சிவலோகம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அந்தச் சிவலோகம்-வைகுந்தம் கூட வறுமையாளருக்குக் கிடைக்காதாம். ஆம்! வறுமையால் மனித மதிப்பீட்டுக்குரிய இனிய பண்புகள் எல்லாம் இழக்கப்படும். அப்புறம் எப்படி வீடுபேறு கிடைக்கும்? சிவலோகம் வேண்டாம். வைகுந்தமும் வேண்டாம். வாழ்ந்தால் போதும், என்றால் "சீச்சி! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, என்று பாரதி பேசினானே! அந்த ஏச்சுக்கு ஆளாகி விடுவர். ஆக, வறுமையுடையவர்கள் இந்த உலகத்திலேயும் வாழ இயலாது! இனிய செல்வ, நாட்டின் நடப்பைப் பார்த்தாயா? என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயா? திருவள்ளுவர் இதற்கும் வழி சொல்கிறார். எந்த ஒரு மனிதனும் சுரண்டப் படுதல் கூடாது. நாட்டில் கூட்டுறவுத்துறையும் பொத்துறையும் வளர வேண்டும். புதிய சொத்துரிமைகள் தோன்றாதபடி கண் காணிக்க வேண்டும்.