பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ! அன்றாடம் நாம் நடத்தும் வாழ்க்கையிலேயே பயன்கள் தென்படுகின்றன. ஆனால், வரலாற்று நுண்ணறிவும் ஆய்வு செய்யும் மனப்பாங்கும் இல்லாததால் இவை அறிதற்கு அரிய பயனைக் காணத் துணை செய்வதில்லை. அறிதற்கு அரிய பயனைத் தேடுபவர்களே மானிடர். அத்தகையோர் பலர் கூடி ஆய்வு செய்வதே மாநாடு. இத்தகைய மாநாடுகளில் செய்திகளை ஆய்வு செய்து பெரும் பயனளிக்கக் கூடிய சொற்களையே சொல்வர். மறைமலை நகர் மாநாடு நம்முடைய நாட்டை முன்னேற்றத் திசையில் உய்த்துச் செலுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த ஆவேசம் கிடைக்கவில்லை. ஏன்? மாநாட்டில் கூடியோர் அறிதற்கரிய பயனை - பெரும்பயனை அறியும் ஆர்வமுடையராக இல்லை. ஏதோ மரபுக்காகக் கூடினர், கலைந்தனர் போல் தெரிகிறது. இது வருந்தத்தக்கது.

இனிய செல்வ,

நம்முடைய திருக்குறள் பேரவையினர் எதிர்வரும் மே 20, 21, 22ஆம் நாட்களில் வட ஆர்க்காடு இரத்தினகிரியில் கூட இருக்கின்றனர். இனிய செல்வ, நீயும் உனது நண்பர்களும் இரத்தனகிரிக்கு வருவது உறுதியான செய்தி; இரத்தினகிரியில் கூடப் போகிறவர்கள்.

"அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்”

என்ற திருக்குறள் நினைவொடு வருக! மற்றவை அடுத்த மடலில்

இன்ப அன்பு
அடிகளார்
22. இகலின்றி வாழ்தல் இனிது

இனிய தமிழ்ச் செல்வ!

உலகம் அபாய கட்டத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆம் அபாயத்திலிருந்து தப்பித்துவிட்டது! ஆனாலும்