பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



307


பகையாளிகளாக வாழ்வது வெட்கக்கேடு. ஆம்! யாழிடைப் பிறந்த இசைபோல, நமக்குத் திருக்குறள் விளங்குகிறது என்று கூறினால் தவறல்ல. சமாதானம் செய்து வைப்பவர் பாக்கியவான்கள். நமது நாட்டு வாழ்க்கையில் அமைதியும் சமாதானமும் திருக்குறள் வழி வருவதாகுக! உலகம் அமைதியுற வள்ளுவர் காட்டும் வழியே வழி!

இன்ப அன்பு
அடிகளார்
23. பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வு

இனிய செல்வ,

மாந்தர் வாழ்வதற்கே பிறந்தனர். ஆனால், வாழ்ந்தால் மட்டும் போதுமா? வாழ்க்கையின் குறிக்கோளை அடைய வேண்டாமா? அதாவது பயனடைய வேண்டாமா? இன்றைய மனிதன் தனியே உழைத்து வாழ்ந்திடவில்லை! இன்றைய மனிதன் சமூக உழைப்பில் வாழ்கிறான். இன்று சமுதாயம் அடைந்துள்ள பெரியதொரு வளர்ச்சி, மாந்தர்களுடைய உழைப்பு, சமூக உழைப்பாக - அதாவது சமூகத்திற்குப் பயன்படக்கூடிய உழைப்பாக வளர்ந்து விட்டது. இந்த வளர்ச்சி அறிவார்ந்த நிலையில் ஏற்பட்டதா? அல்லது உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களின் வழி ஏற்பட்டதா? இனிய செல்வ, நீ கேட்டது நல்ல கேள்வி! நமது நாட்டைப் பொறுத்தவரையில் வரலாற்றுப் போக்கில் அடைந்த வளர்ச்சியேயாம்! இந்தச் சூழ்நிலையில் தனி மனிதர்கள் அல்லது வாயுள்ள சிலர் கூடித் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள நினைப்பது, தங்களுக்கு மட்டும் தீர்வு காணும் வகையில் சிந்திப்பது ஆகியன இன்று நடைபெற்று வரும் தீய பழக்கங்கள்!

இன்று மனிதர்களில் பலர் வாழக் கூட ஆசைப்படவில்லை; பிழைப்பு நடத்த விரும்புகின்றனர். பிழைப்பு என்பது என்ன? அறிவு வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவ