பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தில்லை; அன்பு நெறியில் வாழத் தலைப்படுவதில்லை! ஊக்கமில்லாத நசிவு வாழ்க்கை! சமூக ஆர்வம், சமூகச் சிந்தனை, சமூக உழைப்பு ஆகியன இல்லை! மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! இத்தகையோர் கற்றறிவு இல்லாதவர்களிடத்தில் இருந்தால் கூட மன்னிக்கலாம். படித்தவர்களிடத்திலே கூட இன்று நன்றாக இல்லை. இவர்களைப் பற்றி, பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. "படித்தவன் சூது’ என்றான் பாரதி.

வாழும் மாந்தரை மூன்று பிரிவினராகப் பிரித்தார் திருவள்ளுவர். முதல் வகையினர் சுயநலத்திலே நாட்டமுடைய அணியினர். அவர்கள் தமது பிழைப்பைப் பற்றியே கவலைப்படுவர், ஆதாயங் கருதியே செயற்படுவர். இவர்கள் ஊருணி போன்றவர்கள் என்றார். ஊருணி, ஊருக்குக் கொடுப்பது போலத் தோன்றும். ஊருணி ஊருக்குத் தண்ணீர் கொடுப்பதும் உண்மை; ஆனால் ஊருணி ஏன் ஊரார் உண்ணத் தண்ணீர் கொடுக்கிறது? தனது ஊற்று வளத்தை, தூய்மையை, ஊருணி என்ற தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்துடன் கொடுக்கிறது. கொடுப்பதுகூட இல்லை! மக்களே எடுத்துக் கொள்வதாகும். ஊருணி பயன்படாது போனால் குட்டையாகிவிடும். காலப் போக்கில் ஊருணி பயன்படாத நிலையினதாகித் தூர்க்கப் பெறும். ஆதலால் ஊருணியின் நிலை தற்காப்புத்தான்.

அடுத்த வகையினருக்குத் தற்காப்பு உணர்வு உண்டு. ஆயினும் விருப்பு - வெறுப்பின்றி எல்லோருக்கும் பயன்படுவர். முதலாளித்துவ சமுதாயத்தின், நிலப் பிரபுத்துவ சமுதாயத்தின் நன்றியை விரும்பாத இவர்கள் பயன் மரம் போல் வாழ்பவர்கள்; வளர்ந்தவர்கள்; ஆயினும் முழுமையில்லை.

மூன்றாவது அணியினர் பிறருக்காகவே வாழ்வர். பிறருக்கு வழங்குவதற்காகவே பொருள் ஈட்டுவர். ஈட்டிய பொருளை வழங்குவர். மற்றவர்களுக்காகத் துன்புறுவர்.