பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


24. அளவறிந்து ஆற்றுக

இனிய செல்வ!

நல்வாழ்த்துக்கள்! நமது தமிழகத்தில் ஒரு போராட்டம் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. ஆம்! ஆசிரியர், அரசு அலுவலர்கள் போராட்டம் தான்!

இந்தப் போராட்டத்தை நடத்திய நண்பர்களது குறிக்கோளில் நாம் ஐயப்படவில்லை! ஆயினும், குறிக்கோளை அடையும் வகையில் உள்ள தடைகளைக் கண்டறிய வேண்டும் என்பது நமது விருப்பம்.

மைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வேண்டும் கேட்பதில் தவறில்லை, நடைமுறைச் சாத்தியம் என்ன? இந்தியா ஒரு பெரிய நாடு. பலர் சொல்வதைப்போல இஃது ஒரு துணைக் கண்டம். இந்நாட்டில் மைய-மாநில அரசுகள் தனித்தனி வரவு செலவுத் திட்டமுடையன; தனித்தனி நிதி ஆதாரங்களும் உடையன. மைய அரசு, அதன் நிதி ஆதாரத்தில் சில கோட்பாடுகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி தந்து உதவுகிறது. இந்த நிதி உதவி பெரும்பாலும் திட்ட அடிப்படையினாலான செலவுகளுக்காகவே அமையும். மைய அரசு பணிகளிலும் மாநில அரசுப் பணிகளிலும் எல்லோரும் சேர்தலுக்குரியவர். ஆனால் பலர் மைய அரசுப் பணிகளை விரும்பி நாடுவதில்லை. ஏன்? இவர்களுக்கு இந்திய நாட்டளவில் மாற்றங்கள் நிகழும். மாநில அரசைப் பொருத்தவரையில் மாநில அளவுதான். இரண்டு அரசு ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் என்றால் மைய அரசுப் பணிக்கு யாரும் விரும்பிப் போகமாட்டார்கள். இந்திய நாட்டளவில் பணி மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பணி செய்வது என்பதூஉம், ஒன்றல்ல. ஒரு தன்மையுடையதுமல்ல. மைய அரசு ஊதியம் பெற விரும்புபவர் மைய அரசுப் பணியில் சேர்வதுதான் முறை.