பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



311



மைய, மாநில அரசுகளின் நிதி வேறு. வேறானவை. அதுபோலவே நிதிப் பயன்பாட்டு முறையிலும் மாநில அரசுகள் சுதந்திரமுடையன, இந்தியா முழுவதற்கும் ஒருங்கு படுத்தப்பட்ட - மையப் படுத்தப்பட்ட நிதியில் ஒழுங்கு தோன்றினால் ஒரே மாதிரி ஊதியம் பற்றிச் சிந்திக்க இயலும். மாநிலத்திற்கு மாநிலம் அரசின் நிதி - ஆதாரங்க்ள், தனி நபர் வருவாய், நிதியைப் பயன்படுத்தும் வகை ஆகியவற்றில் நாடு தழுவிய நிலையில் கண்ணோட்டம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் மைய-மாநில அரசுகளில் ஒரே ஊதியம் வாங்குவது சாத்தியமா?

இனிய செல்வ, நமது மதிப்பிற்குரியவர்கள் ஆசிரியர்கள்! நமது அரசு அலுவலர்கள்! இவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்குவது நல்லதுதான். யார்தான் மறுப்புக் கூற இயலும்? ஆனால் நம்முடைய தமிழகத்தின் பொருளாதார நிலை என்ன? நமது நிதிநிலை நெருக்கடிக்கு ஆட்பட்ட நிலை. நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நிதியில் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப் பெறவில்லை. திட்டமிலாத செலவு மிகவும் கூடுதல். தனி நபர் வருமானம் மிகவும் குறைவு. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதல்தான். ஓர் அரசு தன்னுடைய பொருளாதார அடிப்படையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அள்ளிக்கொடுக்குமானால் நாட்டின் செல்வம் கெடுமாம். இது திருவள்ளுவர் கூறும் கருத்து.

"உளவரை துரக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்"

(480)

என்பது திருக்குறள். மைய அரசைப்போல ஊதியம் வழங்க வேண்டுமானால் நமக்குச் சற்றேறக்குறைய 370 கோடி ரூபாய் செலவாகும். இந்தச் செலவை அரசு எப்படி ஈட்டுவது என்று வழிவகை காண வேண்டும். இல்லையானால் அரசின் நிதிநிலை கெடும். நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?