பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டாக வேண்டிய கட்டாயத்திலிருந்து சமுதாயத்தை மீட்டாக வேண்டும். சாதிகளை மறப்பதற்குரிய செயல்முறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இஃதோர் அவசர அவசியத் தேவை.

தீண்டப்படாத நிலையும், மிகப் பின் தங்கிய நிலையுமே அளவுகோலாக அமைய வேண்டும். சாதிப் பெயர்கள் அளவு கோலாகத் தொடர்ந்து இருக்கக் கூடாது. இரத்தினகிரியில் 11-10-80இல் நடந்த திருக்குறள் பேரவை மாநில மாநாட்டின் தீர்மானங்களைப் படித்திருக்கிறாயா? இல்லையெனில் உடனடியாக எடுத்துப் படிக்கவும். சாதிப் படை நோய் நீங்க அத்தீர்மானம் ஒரு சரியான மருந்து என்பதை நினைவிற்கொள்க. அதேபோழ்து,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருக்குறளையும் நினைவிற் கொள்க. இன்னமும் எழுத வேண்டிய செய்திகள் உள்ளன. நாட் காலை 4 மணி வந்து விட்டது. திருக்கோயிலுக்குச் செல்ல அழைப்பு விடுக்கிறார் பரிவு மிக்க தொண்டர் சித. பேச்சிமுத்தன். ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம்!

மற்றவை அடுத்த கடிதத்தில்.

இன்ப அன்பு
அடிகளார்
27. ஆட்சிமொழிச் சிந்தனை

இனிய செல்வ! -

நல்வாழ்த்துக்கள்! தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் யுத்திகளுக்குக் கட்சிகள் அலைமோதுகின்றன. வழக்கம் போலத் தேர்தல் யுத்திகளில் இந்தி எதிர்ப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இந்தி நுழையாமல் பாதுகாப்பது திராவிட முன்னேற்றக் கழகமே என்று உரிமை கொண்டாடுகின்றது.