பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லை என்பதே உண்மை! "விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழகத்தின் ஆட்சியில் முழு நிலைத் தகுதியில் தமிழ், ஆட்சி மொழி ஆகவில்லை. தமிழ் துறைதோறும் பயிற்றுமொழியாக வளரவில்லை. தமிழ், அறிவியல் தமிழாக வளம் பெறவில்லையே!” என்று நாளும் நினைந்து நினைந்து துடிக்கிறார் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி. தமிழ் பேசத் தெரியாத தமிழ் ஆர்வலர் பேராசிரியர் விஞ்ஞானி கை.இ.வாசு அவர்கள் தமிழில் அறிவியலைக் கொணர ஓயாது உழைக்கிறார். ஆயினும் எங்கும் ஆங்கிலம் வாயிலாகக் கற்கும் பள்ளிகள்; கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழி! இந்த நிலையில் தமிழருக்குத் தமிழில் வெறி இருப்பதாகப் பாரதப் பிரதமர் கூறியது முற்றிலும் உண்மை அல்ல. இனிய செல்வ! இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு புதிய செய்தியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதாவது, நமது பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அக்டோபர் 26ஆம் நாள் திருமங்கலத்தில் பேசும்பொழுது, "இந்தி வெறியர்களைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள்" என்று பேசியுள்ளார், தி.மு.கவின் தேசிய முன்னணி இணைப்பை எதிர்க்கும் முகத்தான் இப்படிப் பேசியுள்ளார். "இந்தி வெறி” என்பதை, காங்கிரஸ் ஒத்துக் கொள்கிறதா? அப்படியானால் இந்தியைப் பற்றிய காங்கிரசின் கொள்கை மாறியிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டாக வேண்டும். இந்தியாவின் மொழிக் கொள்கை ஓரிடத்தில் முற்றுப் புள்ளியாகவும் ஓரிடத்தில் காற்புள்ளியாகவும் நிற்கிறது. இனிய செல்வ! இந்தி, இந்தியாவின் அலுவல்மொழி என்பது முடிந்த முடிவு. இது முற்றுப் புள்ளி உள்ள இடம், "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி ஏற்கும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்" என்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானம். இது அரசியல் சட்டத்தில் இடம் பெறவில்லை; அந்தத் தீர்மானத்தில் உள்ள "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பி