பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



321


ஏற்கும் வரையில்" என்ற இடத்தில் காற்புள்ளிதானே இட முடியும்! என்றாவது ஒரு நாள் விரும்ப வேண்டும் என்பது தானே இதன் பொருள். இந்தக் காற்புள்ளியையே முற்றுப் புள்ளியாக நினைத்துச் சிலர் மகிழ்ந்தனர்; வெற்றிவிழாவும் கொண்டாடினர். ஆயினும் இந்தத் தீர்மானம் இந்தி வராது என்பதற்குரியதன்று.

இனிய செல்வ! இன்றுள்ள நிலை என்ன? இந்தி தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா? இல்லையா? இந்தி தமிழ் நாட்டில் வந்துவிட்டது என்பதே உண்மை. ஆங்கிலம், பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் பள்ளிகளில் இந்தி இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பெறுகிறது. இந்தி வகுப்புகள் நாடு முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன. இந்திய அரசாங்கப் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் பொது நிறுவனங்களில் அலுவலர்கள் ஆகியோர் நாளும் இந்தி படித்துத் தேறி ஊதிய உயர்வும் பெறுகின்றனர்; உயர்நிலையும் பெறுகின்றனர். சந்தடியே இல்லாமல் இந்தி தமிழகத்தில் வளர்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்தி கற்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றி உய்த்தறியும் ஆற்றல் மிக்க சமுதாயத்தினர் இந்தியைப் படிக்க ஆரம்பித்து விட்டனர். கிராமபுறத்தில் வாழும் தமிழர்கள் தான் இன்று இந்தி கற்கவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் கற்கும் வாய்ப்பும் இல்லை. ஏன்? கிராமத்து மக்கள் இரண்டாம் தரத்தினர்! அவர்கள் தமிழில் தொடர்ந்து கற்கவும் முடிவதில்லை. இனிய செல்வ! ‘தமிழ் ஆர்வம்' ‘இந்தி எதிர்ப்பு’ ஆகிய இவை வரலாறாக இல்லை; வாழ்வாக இல்லை. இதுவே உண்மை. இத்தகு உண்மையைச் சிலர் ஏற்க மறுக்கலாம். ஆயினும் திருக்குறள் நெறிப்படி.

'உலகத்தா ருண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்’

என்பதே உண்மை. இன்ப அன்பு

அடிகளார்

தி.22.