பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொறுப்பிலேயே ஏற்று நடத்தும்படி செய்யலாம். அடுத்து, பத்து லட்சத்துக்கும் மேல் வருவாய் வரும் கோயில்கள் தங்கள் ஊரில் உள்ள முதலமைச்சர் சத்துணவு மையத்தை நடத்தலாம். இவைகளுக்கு வேண்டுமானால் செலவின் அடிப்படையில் 50 விழுக்காடு அரசு மான்யம் வழங்கலாம். இந்த மான்யம் தணிக்கை மேலாண்மை வசதிக்காக, இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறையும்.

அடுத்து இருப்பது இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை. இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆரம்பகாலத்திலிருந்து தவறான அணுகுமுறை இருந்து வந்துள்ளது. ஆதி திராவிடர் இட ஒதுக்கீட்டு முறையும் அப்படியேதான். சாதி அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டுமுறை இருந்தால் அது உண்மையில் பயன்படாது. சாதி முறையோடு தலைமுறை வரலாறு, குடும்ப அடிப்படை ஆகியனவும் அளவு கோலாக அமைந்தால்தான் கடைகோடி மனிதனுக்கும் பயன்படும். சாதி, பொதுவான அணுகுமுறை. இட ஒதுக்கீடு-கல்வித் தலைமுறை குடும்பத்தின் கல்விச் சூழல் எப்படி அமைந்திருக்கிறது? மூன்று தலைமுறை பட்டதாரிகளாக அமைந்துவிட்ட குடும்பத்தில் கல்வியின் ஊற்றுக்கண் நன்றாகவே அமையும். குடும்ப வருமானம் என்ன? நிலவருவாய், வியாபார வருவாயாக இருந்தால் வருவாயைக் கொண்டு கணக்கிடாமல் அளவைக் கொண்டே நிர்ணயித்து விடலாம்.

தமிழினத்திற்குரிய பகை ஆரியப்பகையோ-பார்ப்பனப் பகையோ அன்று. சாதி வேற்றுமைகள்தான் தமிழினத்தை உள் நின்றழிக்கும் பகை கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தச் சாதி முறைகளை எதிர்த்துப் போராடியும் சாதிப்பகை அகன்றபாடில்லை. இந்தச் சிக்கலிலும் அதிகமான உணர்வுப் பாதிப்புகள் வேறு ஏற்பட்டுள்ளன. இனிய செல்வ, இயல்பாகவே செயல்திறம் மிக்க கலைஞர், இந்தச் சாதிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார் என்றே நம்புகின்றோம்.