பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கூறிவிட்டு, இதுபோன்ற மாநாடுகளில் கூட "நம்மை அழைக்க வேண்டும்" என்று பெருமை பாராட்டக்கூடாது என்று பேசினோம். நமது எடுத்துக்காட்டு பொதுவானது தான்! ஆயினும் கூட்டத்திற்கு வந்திருந்த புதுப்பட்டி தி.மு.க. ஆர்வலர் ஒருவர் இந்தப் பேச்சின் சுருக்கத்தை, கலைஞருக்கு அனுப்பிவைத்து அந்தக் கருத்தை கலைஞரைத் தாக்கிப் பேசியதாக முடிவெடுத்தும் எழுதி விட்டார். கலைஞர் அவர்கள் அந்தக் கடிதத்தை நமக்கே அனுப்பிவைத்தார்கள்! கலைஞர் அவர்களுக்கு விளக்கம் எழுதினோம்! இனிய செல்வ, இவ்வளவு முன்னுரை எதற்காக? என்று கேட்கிறாயா? இதோ முடிவுரை!

கலைஞர் அரசு, அமைந்தது! கலைஞரின் தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு அழைத்தது! நாமும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நீண்ட நேரம் சிந்திக்க நேரிட்டது. வேறு காரணம் அல்ல. பணிப் பொறுப்புக்களை மேலும் ஏற்கத் தயக்கம்! ஆயினும் அருள் தந்தை பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளும் வற்புறுத்தினார்கள்! ஒருவழியாக இசைவு! கூட்டத்தில் கலந்து கொள்ளும் முடிவு! அன்றைய கூட்டத்தில் முனை முறியாத அரிசியைப் போல மணம் நிறைந்ததாக கலைஞர் அவர்களுடைய செயற்பாடு இருந்தது! நாம் எப்போது பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்று கலைஞர் அவர்களிடமிருந்து வழிகாட்டுதல்கள் அடுத்து! கலைஞர் வழக்கம் போல விரைவில் முடிவெடுத்து விட்டார்; ஆலோசனைக் குழு அமைப்பது என்று! அந்த முடிவினை - அமைப்பின் பெயரை மட்டும் (உறுப்பினர்கள் பெயர் இல்லை) தமது முத்தான எழுத்தில் எழுதி அனுப்பினார்! நமது இசைவுக்குத் தடை ஏது? முதலமைச்சரின் முடிவு! தமிழினத்தலைவரின் முடிவு! அதற்கு நமது இசைவு கேட்கப் பெறுகிறது என்றால் அதற்குக் காரணம்தான் என்ன? வேறொன்றும் இல்லை! இதோ திருக்குறள் விடை கூறுகிறது.