பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



335


குறைவு. ஏன், எந்த ஒரு நிகழ்ச்சியும் கடமையும் குறித்த காலத்தில் செய்யப்படுவதில்லை! நமது நாட்டில் காலம் தாழ்ந்து வருபவர்கள் பெரியவர்கள்! தலைவர்கள்! ஒரு சில பொது நிகழ்ச்சிகள் மணிக்கணக்கில் காலதாமதமாவதைக் கண்டிக்கிறாய் அல்லவா? இப்படியெல்லாம் காலம் கொலை செய்யப்பெறும் நமது நாட்டில் பலர் கடிகாரம் கட்டிக் கொள்கிறார்கள்! இன்று கடிகாரமும் ஓர் ‘அணி’ அழகுப் பொருள்; இல்லை, இல்லை! மதிப்பை உண்டாக்கும் ஒரு பொருள் என்றாகி விட்டது! இன்று நமது நாட்டில் நுகர்வுக்குரிய வருவாய்க்கும் (வாங்கும் சக்திக்கும்) நுகர்வுப் பொருள் படைப்புக்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதலானது.

தனிக் குடும்பநிலையே இப்படி என்றால் பல குடும்பங்களுக்குப் பொறுப்பேற்கக் கூடிய அரசின் சங்கடங்கள் மேலும் பலவாக இருக்கும் அல்லவா? எனவே, இதில் அரசு, தனது வருவாய்ப் பெருக்கத்திற்குரிய வாயில்களைக் கண்டறிய வேண்டும். மக்களிடம் வரி வாங்குவதன் மூலமே தன்னுடைய வருவாயை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. புதிய புதிய வருவாய் வாயில்களை அரசின் சார்பானதாகவே விளங்குமாறு கண்டறிந்து நடைமுறைப் படுத்தி, வருவாய் காணவேண்டும். அதாவது, அரசு தானே நடத்தக் கூடிய தொழிற்சாலைகள், பண்ணைகள் முதலியன நிறுவவேண்டும் (Public Sector), அங்ஙனம் அமைக்கப்பெறும் தொழிற்சாலைகள்-பண்ணைகள் மூலம் வரும் வருவாய்கள் மூலதனம் ஆகும் ஆற்றல் பெறும் வரை நிதியைத் தொகுக்க வேண்டும். தொகுத்த நிதியைக் காப்பாற்றவும் வேண்டும். இன்று அரசுக் கருவூலங்களில் நிதித் தொகுப்பு சேர்வதில்லை. முதலமைச்சர் பொறுப்பை கலைஞர் ஏற்றுக் கொண்ட பொழுது, "கஜானா காலி’ என்று சொன்னதை நினைவு கூர்க.