பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆம்! சிங்களப் பகைவர்களைக் கண்டு அஞ்சி, நமக்கு நட்பும் உறவும் போல வந்த விடுதலைப் புலிகளை ஏற்றது தவறு. விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி நமது நட்பும் உதவியும் நாடிவந்த இலங்கை அரசை நம்பியது தவறு. இவை இரண்டுமே செறுத்து ஒறுத்து ஒதுக்கத்தக்கவை. இனிய செல்வ! மேலும் விளக்கம் எழுத விரும்பவில்லை! உய்த்து உணர்க!

இன்ப அன்பு
அடிகளார்
36. எனைத்தானும் நல்லவை கேட்க!

இனிய செல்வ,

மானுட சாதி சுவைத்து மகிழும் சுவைகள் பலப்பல. இலக்கியத் துறையில் ஒன்பது சுவை. உணவுத் துறையில் அறுசுவை. இனிய செல்வ, அறுசுவையைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லையல்லவா? ஆம்! அறு சுவையறியாதார் யார் உளர்? ஆனால் இலக்கியத் துறையைச் சேர்ந்த ஒன்பது சுவையை அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே. அவருள்ளும் இந்தச் சுவைகளை அனுபவித்தவர்களை - அனுபவிக்கின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்று நமது நாட்டில், கேட்கும் பொறிகளாகிய செவிகளுக்கு, நிறைய வேலை கிடைக்கின்றன.

வலியக் கூடக் கொண்டு வந்து தருகிறார்கள்! கேட்க வேண்டாதவைகளைக் காலங்கெட்ட காலத்திலும் கூடத் தர முயற்சி செய்கிறார்கள். இதனால் எங்கே நமது காது கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க வேண்டியதைக் கேட்க இயலாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சமும் தோன்றுகிறது.

இன்று மேடைகள் வளர்ந்து வருவது உண்மை. நூற்றுக்கணக்கான பேச்சாளர்கள் தோன்றியிருப்பதும் உண்மை. ஆனால் எத்தகைய செய்திகள் மேடைகளில் பேசப்படுகின்றன? இலக்கியம் பேசப்படுகிறதா? இல்லை! இலக்கியத்தின்