பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



347


பெயரால் துக்கடாச் செய்திகளே பேசப்படுகின்றன. அந்தத் துக்கடாச் செய்திகளும் கூடத் தரம் குறைந்தவையே. ஊரெலாம் அரசியற் கட்சிக் கொடிகள்! நாளும் அரசியல் மேடைகள்! ஆனால், எந்த மேடையிலாவது அரசியல் பேசப்படுகிறதா? எங்கே? இனிய செல்வ, உண்மையைச் சொல் பார்க்கலாம்! எங்குப் பார்த்தாலும் எரிந்த கட்சி-எரியாத கட்சி பற்றியே பேச்சு! மதசம்பந்தமான மேடைகளிலோ அமைதியும் இல்லை; சாந்தமும் இல்லை. நேர்மாறாக வெறுப்பு-விருப்புகளையே பேசுகின்றனர்! மதப்பிரசாரகர்கள், மதம்பிடித்துப் போய் அலைகின்றனர்! இதில் எந்த மேடையில் மானுடத்தின் ஆக்கத்திற்குரிய செய்திகள் கிடைக்கப் போகின்றன? ஐயகோ, பாபம் பரிதாபநிலை!

செவிச் சுவை! ஆம், செவிச்சுவைமிக்க இலக்கியச் சிந்தனைகளே வாழ்வளிக்கும்! அன்புச்சுவை நிறைந்த செய்திகள்! ஆழ்ந்த அறிவியல் சார்ந்த சிந்தனைகள்! பெருமிதம் தரும் செய்திகள்! நாளும் உயிர் ஓம்பி வளர்க்கும் உயர் சிந்தனைகள்! இவைகளைப் பரப்புகிறவர்கள் தரம் உயர் சிந்தனையாளர்கள்! அறிஞர்கள்! உயிர் குலத்தின் செவிகளுக்குச் சுவையாகவும் வாழ்வளிப்பனவாகவும் பேசப் படும் பேச்சே, பேச்சு!

இனிய செல்வ! பலர் சென்ற காலத்தின் புகழினைப் பற்றியே பேசுவர். இதனால் விளையும் பயன் என்ன? சென்ற கால நிகழ்வுகளின் விவரங்கள் இன்றைய சமூகத்திற்குத் தேவையில்லை. சென்றகால சமுதாயத்தின் தவறுகளுக்குத் தீர்வுகள் தேவை. முடிவுகள் தேவை. அங்கிருந்து இன்றைய வாழ்வு தொடங்கப்படுகிறது; எதிர்காலத்திற்குரிய முயற்சி கால் கொள்ளப்படுகிறது; எனவே, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை தேவை. இத்தகைய பேச்சு தேவை. செவிக்குச் சுவை, கேட்கத் தூண்டுகிற அளவுக்குச் சிறிது தேவை.