பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், மிகுதியும் தேவை உயிர் செழித்து வளரக் கூடிய செய்திகள்! இத்தகைய பேச்சு, ஒரோவழி கசப்பாக இருந்தாலும் விளைவு வாழ்க்கையில் இன்பச் சுவையேயாம். பயனிலாதன சுவையுடையன அல்ல. இன்றைய மேடைகள் பல நோய்களைப் பரப்புகின்றன. மேடைப் பேச்சாளர்கள் பலர் நோய் பரப்பும் கிருமிகளாகவே உள்ளனர். சந்துகளிலும், திண்ணைகளிலும் தேநீர் கடைகளிலும் உந்து வண்டிகளிலும் சாலை ஓரங்களிலும் இன்று எங்கும் பேச்சு! என்ன பேச்சு? நோயைப் பரப்பும் பேச்சுக்களேயாம். சமுதாயப் பகைமையை வளர்க்கும் நச்சுப் பேச்சுக்கள்! இன்று நஞ்சு பாம்பிடத்தில் இல்லை. மனிதனின் பற்களில்தான் இருக்கிறது.

இனிய செல்வ, சமுதாய மாற்றங்கள் ஏற்படச் செவிச்சுவை தேர்ந்து கேட்க வேண்டும். 'எனைத்தானும் நல்லவை’ கேட்க, வேண்டும். வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கக்கூடிய புதியவற்றைக் கற்க வாய்ப்பில்லை. கற்றார் வாய் கேட்கக் காமுறுதல் வேண்டும். பழகும் வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டும், தரத்தை உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் செவிக்குச் சுவையான செய்திகள்; உணர்வுகளுக்கு இனிய செய்திகள், உயிர்க்கு இனிய செய்திகள்; அறிவார்ந்த செய்திகள் கிடைக்கும்! நமது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்! வளர்ச்சியும் கை கூடும்! இனிய செல்வ, எல்லா உணவும் உணவல்ல! எல்லாப் பேச்சும் பேச்சல்ல! இனிய செல்வ, நச்சுணவை விரும்பாததுபோல, நச்சுச் செய்திகளையும் கருத்துக்களையும் கேட்காதே! அறிவியல் அறிஞர்களை நாடித் தேடுக! அவர்கள் கூறுவதையே கேட்க! அடுத்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்