பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



349


37. ஜனநாயகமும் கருத்துப் பரிமாற்றமும்

இனிய செல்வ,

நமது நாடு மக்களாட்சி முறையில் இயங்குகிறது. அதாவது ஜனநாயக முறையில் இயங்குகிறது. மானுடம் கண்ட சிறந்த அரசியல்-சமூக வாழ்வியலிலேயே மிகவும் சிறந்தது ஜனநாயக அரசியல் முறையேயாம். ஜனநாயக ஆட்சி முறையில்-மக்களாட்சி முறையில் எந்த ஓர் இடத்திலும் அதிகாரம், மையம் கொள்ளாது. ஒரோ வழி மையங் கொண்டாலும் பலரைத் தழுவிய நிலையிலேயே மையங் கொள்ளும். இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானதே! நமது நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி, ஆனால், நாம் ஜனநாயகத்திற்கு, ஜனநாயக வாழ்க்கை முறைக்கு இன்னமும் பக்குவமாகவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஜனநாயக வாழ்க்கை முறைக்குப் பகைமை, காழ்ப்பு ஆகா. அதுபோலவே வெறுப்பும் காட்டாது பகைமையும், கசப்பும் காழ்ப்பும் கடந்ததே ஜனநாயக வாழ்க்கை. ஏன்? ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதங்கள் இருக்கும். தூற்றுதல் இருக்காது. ஜனநாயக வாழ்க்கை முறையில் விவாதித்து விவாதித்துக் கருத்தொருமை காண்பதே நோக்கம்.

இனிய செல்வ, உலகத்தை நட்பாக்குவதே அறிவு என்று திருக்குறள் கூறுகிறது; ஆம்! தம்மைச் சார்ந்தாரையும் சார்ந்துவரத் தயங்குவாரையும் முரண் நிற்பாளரையும் நமக்கு நட்பாக்கிக் கொள்வதே ஜனநாயக வாழ்க்கையின் நியதி. சிறந்த அறிவின் பயனும் அதுவே.

இன்று ஜனநாயகம் என்ற பெயரில் சண்டைகளே நடக்கின்றன. தமக்கு வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு உதவி செய்யவில்லை என்று ஆட்சி எந்திரத்தையே அவர்களுக்கு விரோதமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த முறைகள்