பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுறுப்பு அடையவில்லை! இனிமேலும் அடைவார்களா? என்பதும் கேள்விக்குறியே!

இனிய செல்வ, நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது! ஆனால் வாக்காளர்களோ வாளா இருக்கிறார்கள்! வாக்காளர்களுக்குத் திருவள்ளுவர் அற்புதமான ஆலோசனைகளைக் கூறியுள்ளார்! திருவள்ளுவர், வாக்காளருக்கென்று எழுதியுள்ள திருக்குறள்:

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

(517)

என்பதாகும்.

"இதனை’ - அதாவது வாக்காளர்களின் குறிக்கோளை-திட்டத்தை-தனிமனிதச் சார்பற்ற நாட்டின் பொதுத் திட்டத்தை என்பது பொருள். இன்றைய சூழ்நிலையில் நமது வாக்காளர்களின் பொதுத்திட்டம் எதுவாக இருக்க முடியும்?

1. வறுமையையும், ஏழ்மையையும் முற்றாக ஒழித்து வளமான சமுதாயத்தை அமைக்கப் பொதுத் துறையை வலிமைப் படுத்துதல்-கூட்டுறவுத் துறையை வலிமைப்படுத்துதல் மூலம் சமவாய்ப்புச் சமுதாயம் (சோஷ லிசம்) காணத் திட்டமிடல்; செயற்படுத்துதல்.

2. சாதி, மத வேற்றுமைகளற்ற ஒருமைப்பாடுடைய சமுதாய அமைப்பைக் காணல்.

இவையிரண்டும் இன்றையத் தேவை! முதல் தேவை! மேலும் சிலவும் உண்டு. ஆயினும், இவையே முக்கியமானவை! இந்த இலக்குகளை நாடு அடையக் கூடிய வழிவகைகளை ஆராய்ந்து செயல்புரியத் தக்காரே நமது பேராளராக-நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதி உடையவர். இன்றைய தேர்தலில் நிற்கும் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் அறிக்கைகளைக் கவனமாகப் படிக்க வேண்டும்! இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளைக் கவனமாகக் கேட்க வேண்டும்; இதற்கும் திருவள்ளுவர்,