பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



363


இரயில் நிலையம், தொலைபேசி ஆகியவை அமைக்கப் பெறுகின்றன. இவையெல்லாம், மாநாடு நடக்கின்ற வரை இயங்கும் தற்காலிகத் தன்மையுடையனவேயாம். மாநாடு முடிந்தவுடன் அகற்றப்படும். இதுவே நடைமுறை. ஒரோவழி சில மாநாடுகளில் புதிய நகர்கள் தோன்றுவதும் உண்டு. சென்னையில் புதிய நகர் ஒன்றும் தோன்ற வில்லை.

மறைமலை நகரில் தான் மாநாடு நடக்கிறது. மாநாட்டின் போது ஒரு நகரமும் தோன்றவில்லை. இந்த நிலையில் மறைமலை நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்காக அமைத்த இரயில் நிலையத்திற்கு "மறைமலை நகர் இரயில் நிலையம்” என்று பெயர் வைக்காமல் “காமராசர் இரயில் நிலையம்” என்று பெயர் வைத்தது ஏன்? மறைமலை நகருக்கு காமராசர் பெயரில் இரயில் நிலையம் பொருந்துமா? பொருந்தாதா? என்பதல்ல கேள்வி! காங்கிரஸ் நண்பர்களுக்குத் தமிழ்ப் பற்று உண்டா? இல்லையா? என்பதல்ல கேள்வி! மறைமலை நகரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்காக ஓர் இரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கு ‘மறைமலைநகர் நிலையம்’ என்ற பெயர் வைப்பது இயல்பான சிந்தனை. ஏன் வைக்கவில்லை? இனிய செல்வ, இரயில் நிலையத்தை நிலைப்படுத்தித் தரும்படி தீர்மானம் போடுகிறார்கள். மாநாடு முடியும் நிகழ்ச்சியில் கடைசியில் அமைவது தீர்மானங்கள் நிறைவேற்றுதல். அந்தத் தீர்மானத்தில் மாநாட்டுக்காக அமைத்த - காமராசர் பெயரால் அமைத்த இரயில் நிலையத்தை மறைமலையடிகள் இரயில் நிலையமாக அமைத்துத் தரும்படி கேட்பது தானே முறை? எப்படி இந்த நிலை மாறியது? காங்கிரஸ் நண்பர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களிடமிருந்த பற்று காரணமாக இருக்கலாம் என்று கூறக்கூடும்.

இனிய அன்பு, ஆம்! உண்மைதான்! தமிழராய்ப் பிறந்தார் யாருக்கு - பெருந்தலைவர் காமராசர் புகழ் பாடுவதில் விருப்பம் இருக்காது? பெருந்தலைவர் காமராசரை நினைவுச் சின்னங்கள் மூலம் நினைவு கூர்வதா?