பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



365


பாதிக்கக் கூடிய ஆரம்பக் கல்வியைப் பற்றிய பேச்சில்லை! மூச்சில்லை! மேலும் பல ஓராசிரியர் பள்ளிகளைத் திறப்பதாக அறிவிப்பு! அவசியமென்ன? தெரியவில்லை. இனிய செல்வ, நமது நாட்டில் செல்வம் இல்லாமல் இல்லை. ஆனாலும் ஏழ்மை வளர்கிறது! ஏன்? நாட்டின் செல்வத்தில் 80 விழுக்காடு செல்வத்தை 20 விழுக்காடு கோடீசுவரர்கள் அள்ளி கொள்கின்றனர். இனிய செல்வ, மக்கள் தொகையில் (80) எண்பது விழுக்காட்டினர். 20 விழுக்காட்டளவேயுள்ள நாட்டுச் செல்வத்தைப் பங்கிட்டுக்கொண்டு வறியவர்களாக வாழ்கின்றனர். இனிய செல்வ இதனை Economics Times, 'Too little for too many" என்று கூறி நையாண்டிப் படமும் போட்டுள்ளது. கிராமப்புற ஏழைகளுக்காக நிறைய பேசுகிறார்கள்! ஆனால் ஒன்றும் நடப்பதில்லை. கிடைப்பதெல்லாம் இருக்கும் சொரணையையும் மறக்கடிக்கச் செய்ய சில சில இலவசங்கள்; அவ்வளவுதான்; ஆட்சிமுறை முதலாளிகள் அகம் மகிழவே நடக்கிறது. எங்குப் பார்த்தாலும் இழுத் தடிப்புகள்! இனிய செல்வ, இதுதான் இன்றைய நடைமுறை அரசு. அடிமை காலத்திய ஆட்சி அமைவுப் பொறிகளில் சுதந்திரத்தின் தாக்கம் இல்லை. மாற்றமும் இல்லை! பழைய முறைகளிலேயே (பாணி) வேலை செய்கிறார்கள்! புரட்சிகரமான முற்போக்குச் சிந்தனைகளையும் செயல்களையும் தடுப்பாரின்றியே சிதற அடித்து வருகின்றனர். தடுத்துக் கேட்பார் யாரும் இல்லை! அப்படியே கேட்டு விட்டால் ஆபத்து காத்திருக்கிறது. இனிய செல்வ, திருவள்ளுவர் அரசியலுக்கு-அரசுக்குச் சொன்ன நெறிமுறை இன்றும் பொருந்தும். நாளைக்கும் பொருந்தும்.

இனிய செல்வ, நாளும் அரசுகள் செல்வம் வளர்தலுக்குரிய புதிய புதிய யுத்திகளை, வழிமுறைகளைக் கண்டாக வேண்டும். இதற்குப் பயன்படுவனவே தேசிய அறிவியல் மையங்கள்! தேசிய அறிவியல் ஆய்வு மையங்களை இன்று அரசு கலந்து ஆலோசிக்கின்றன என்பதற்குரிய