பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதாவது, நடுவண் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு 27 விழுக்காடு செய்வதாக முடிவு. இனிய செல்வ, இது தொடர்பாக ஒரு செய்தி உனக்கு தெரிந்தாக வேண்டும். அதுதான் நடுவண் அரசு பணிகளுக்கு ஆள் தேர்வு செய்வதில்லை என்ற அரசின் முடிவு. அதாவது, அரசு அலுவலகங்களில் ஒரே கூட்டம்! போதும் போதும் என்றாகி விட்டது போலும்! இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு அறிவிப்புகள்! வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் ஆர்வம் இல்லை! முயற்சி இல்லை! இருப்பதை எப்படிப் பங்கிடுவது என்பதுதான் கவலை!

இனிய செல்வ, கம்பன் கூட "எல்லாருக்கும் எல்லாம்” என்றுதான் கனவு கண்டான்! நமது நிலை ஏழ்மையை, இன்மையைப் பங்கிட்டுக் கொள்வது எப்படி என்பதுதான்; இனிய செல்வ, தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர் ஒதுக்கீடுகள் வேண்டாம் என்பது நமது கருத்து அல்ல. உயர் சாதியினருக்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பின் தங்கியவர்களுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம் என்பதிலும் இரண்டு கருத்து இருக்க நியாயமில்லை. ஆயினும், இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மட்டும் குறைக்க கூடியதா? குறைக்க முடியுமா? தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பின் தங்கியவர்கள் ஆகியோரின் 80 விழுக்காடு பேரின் தரமும் செயல் திறன்களும் முறையாக வளர்க்கப்படுதல் வேண்டும். இன்று பெறும் இந்த வளர்ச்சி தான் உண்மையான நலம் பயக்கும். இடைக்கால ஏற்பாடாக ஒதுக்கீட்டை ஏற்கலாம்.

தாழ்த்தப்பட்டோர், மிகவும் பின்தங்கியோர், எண்பது விழுக்காட்டு மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். மற்ற 20 விழுக்காட்டினர் நகர்ப்புற வாசிகளாக மாறி உள்ளனர். இவர்களில் பலர் வளர்ந்தவர்கள். இவர்கள் தொடர்ந்து வளரவும் நிலைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இன்றைய கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளின் தரம்... ஐயோ... ஐயோ...! எழுதவும் கூசுகிறது. அவ்வளவு