பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்தல் வேண்டும். இதன் காரணமாக தாழ்த்தப்பட்ட சாதிமுறை மாறாநிலை உருவாகிறது என்பதுதான் உண்மை.

இனிய செல்வ, ஆம்! நீ கேட்பது சரியான கேள்வி! கல்வியைப் பொருத்தவரையில் மக்களை நான்கு பிரிவினராகப் பிரிக்கலாம். மூன்று தலைமுறை வரையில் கல்வியில் முதுகலை அல்லது தொழிற் கல்வி, மருத்துவக்கல்வி, பொறியியற் கல்வி பெற்றிருந்தால் அந்தக் குடும்பம் கல்வியில் முன்னேறிய குடும்பம் என்று கருதிச் சலுகை பெறும் சாதிப் பட்டியலிலிருந்து நீக்கி முன்னேறிய சாதிப்பட்டியலில் சேர்க்கவேண்டும். நமது பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் இந்தத் திட்டத்தை வேறுவகையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பட்டதாரியே இல்லாத குடும்பத்தினைச் சார்ந்தவருக்கு 5 மதிப்பெண் கூட்டுவது என்ற திட்டம்தான் அது. இதற்குச்சாதி இல்லை; சாதி வேண்டாம்! கல்வியில் பின்தங்கிய குடும்பம் என்ற ஒரே அளவுகோல்! இந்த அளவுகோலைப் பணி இட ஒதுக்கீட்டுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே பலர் விருப்பம். இஃது ஒரு வரவேற்கத்தக்கமுறை. அடுத்து, பொருளாதாரத்தில் மட்டும் பின் தங்கியவர்கள். இவர்களுக்குப் பொருளாதார உதவி மட்டுமே கிடைக்கும். கல்லூரிகளில் இடஒதுக்கீடோ, மதிப்பெண். சலுகையோ கிடைக்காது; கிடைக்கக்கூடாது. அடுத்து, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள். இவர்களுக்கு இரண்டு உதவிகளும் தரவேண்டும் என்று முறைப்படுத்துவதோடன்றி இதில் பின்னடைவோரைக் குடும்ப அடிப்படையில் கணித்து அட்டைகள் (cards) வழங்கிக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் மேம்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். நிர்ணயிக்கப்பெற்ற மேம்பாட்டு நிலைக்கு வந்தவுடன் அவரும் இவருடைய குடும்பமும் முன்னேற்ற மடைந்த சாதியைச் சேர்ந்த குடும்பமாகக் கருதப்பட வேண்டும். அல்லது முழுதும் முன்னேற்றமடையாமல் இருந்தால் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைகளுக்கும் செல்லலாம். 10