பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



387


ஒரு பெரிய கடமை இருக்கிறது. இனிய செல்வ, என்ன கடமை என்றா கேட்கிறாய்? அதுதான் மக்களிடம் கள்ளுண்ணலின் கொடுமையை உணர்த்துவது! இந்தக் கடமையை உணர்ந்து இன்று செய்வார் யார்? இன்று நமது நாட்டில் சமூகச் சிந்தனையாளர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. இனிய செல்வ, கலைஞரின் கொற்றம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது! அந்த உரிமையைப் பாராட்டுக்குரிய கலைஞர் மறுத்ததில்லை. இனிமேலும் மறுக்கமாட்டார்! மறுக்காதது மட்டுமல்ல. கவலையுடனும் கவனத்துடனும் ஆய்வு செய்வார்! செய்யக் கூடியதைச் செய்வார்! நம்புவோமாக!

இன்ப அன்பு
அடிகளார்
52. நாடுக நடுநிலை

இனிய செல்வ,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது நமது திருக்குறள். அன்றே மானிட சமுதாயம் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் அமைதி வழியில் நடைபோட நடுவுநிலைமைப் பண்பு தேவை என்றார் திருவள்ளுவர். மனிதன் சார்புகளில் சிக்கித்தவிப்பவன்; உழல்பவன் அவனுடைய சுபாவங்கள் இயல்பாகவே சார்புகளைச் சார்ந்தே அமையும். ஒரோவழி சார்புகளிலிருந்து விடுதலை பெற்றாலும் ‘உலகம்’ பைத்தியக்காரன் என்று ஏசும்! வாழவிடாது. இதுவே சென்ற கால வரலாறு.

இனிய செல்வ, நடுவுநிலை என்பது சார்புகளினின்று நீங்கிய குணம். நடுவு நிலைமைப் பண்பு நன்மையை, உண்மையை, நேர்மையை மையமாகக்கொண்டு வளரும் பண்பு. நடுவு நிலைமைக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. நடுவுநிலைப்பண்பு கற்றறிந்த அறிஞர்களுக்கே உரியது. புலனழுக்கற்று யார்மாட்டும் அருள்புரிந்தொழுகும்