பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



389



இனிய செல்வ, செய்தித் தாள்களில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்ற பெயர்கள் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்பாய்! பாலஸ்தீனத்தின் எல்லைச் சிக்கல் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் மேற்கத்திய வல்லரசுகள் அடிக்கடி தம் போக்கிற்கேற்ப, இந்த நாடுகளின் எல்லையை மாற்றிக் கொண்டே வந்துள்ளன. இனிய செல்வ, கடைசியாக 1967-இல் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையையும் காசாஸ்டியையும் 6 நாள் போரில் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பினால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அராபியர்கள் நாடற்றவர்கள் ஆயினர். இந்த ஆக்கிரமிப்புக்கு நாடற்றவர்களான அராபியர்களுக்கு இதுவரையில் என்ன தீர்வு என்றே தெரியவில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபை மெளனம் சாதிக்கிறது. அப்படியானால் குவைத்துக்கு மட்டும் என்ன அவசரம் வந்தது? இராக் அதிபர் சதாம் உசேன் என்ன கேட்கிறார்? பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு நீதி கேட்கிறார்! இதற்குப் பதிலே இல்லை! இதுதான் ஐ.நா. சபையின் குறிக்கோளாக இருப்பின் ஐ.நா சபையே ஒரு பஞ்சாயத்துப் படையை அனுப்பி மீட்கலாமே! ஏன் பன்னாட்டுப் படைக்கு அனுமதி வழங்கவேண்டும்? இவையெல்லாம் புரியாத புதிர்! இனிய செல்வ, குவைத்தை மீட்பதுதான் அமெரிக்காவின் நோக்கமா? ஐ.நா. சபையின் நோக்கமா? அப்படியானால் ஈராக்கின் மீது குண்டு மழை பொழிவானேன்? ஈராக் மக்கள் என்ன தவறு செய்தார்கள்? இனிய செல்வ, அமெரிக்காவுக்கு, போர்க் கருவிகள் செய்வதும் விற்பதுமே ஒரு பெரிய தொழில். கடன் கொடுப்பதும் கடன் வாங்கிய நாடுகளின் வாக்குகளை ஐ.நா. சபையில் பெறுவதும் அமெரிக்காவின் சாகசம்.

இனிய செல்வ, வீட்டிலும் நாட்டிலும் நடுவு நிலைமை தேவை. உலகிலும் நடுவு நிலைமை தேவை. அதுவும் ஆளுவோருக்கு இன்றியமையாத தேவை நடுவுநிலைப்பண்பு.