பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



393


54. யாரைத் தேர்ந்தெடுப்பது?

இனிய செல்வ,

நாடு, தேர்தலைக் காண இருக்கிறது. இந்த உலகம் கண்ட ஆட்சி முறைகளில் மக்களாட்சி முறையே சிறந்தது. ஆனால், மக்களாட்சி முறை வெற்றி பெறுவது எளிதன்று. மக்களாட்சி முறை வெற்றி பெற வாக்காளர்கள் அறிவும் தெளிவும் உடையவர்களாக வேண்டும். நமது நாட்டில் 77 விழுக்காடு எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாழும் நாடு. இனிய செல்வ, நமது தேர்தல் முறை எளிதன்று. ஆதலால், நமது தேர்தல் மக்களாட்சிப் பண்புகள் தழுவிய தேர்தல் அல்ல. சாதிகள் தேர்தலில் வெற்றி பெறுகின்றன. பணம் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. மதங்கள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. கவர்ச்சிகள் ஏன் மெள்ள மெள்ள வன்முறையுங் கூடத் தேர்தல் சாதனங்களாக வளர்ந்து வருகின்றன.

இனிய செல்வ, வாக்காளர்களின் தரம் உயர்ந்தால் தான் ஆட்சியின் தரம் உயரும். திருவள்ளுவர் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டிய திருக்குறள் ஒன்று தந்துள்ளார்.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"

என்பதுதான் அந்தத் திருக்குறள்; இனிய செல்வ, ‘இதனை’ என்பது என்ன? இன்றைய நாட்டின் நலனே என்று கொள்ளலாம். இன்று நமது நாடு நன்றாக இல்லை; வலிமையாக இல்லை! வளமாக இல்லை. ஒரு நலமுடையதாக இல்லை. நமது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கடனில் மூழ்குகிறது. எங்கும் கையூட்டு வழக்கமாகி விட்டது. வேலை இல்லாத் திண்டாட்டம். இனிய செல்வ, கையூட்டும் சார்புகளும் இல்லாத அரசு அமைய வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் வழங்காமல்