பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடின உழைப்புடையவர்களாகிட வழி நடத்த வேண்டும். மக்கள் உழைப்பால் படைக்கப்பெறும் வளத்தைச் சுரண்டுபவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். நல்ல தரமான கல்வியறிவு வழங்கப்பெறுதல் வேண்டும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடைய நீண்ட ஆயுளுடைய அரசாக விளங்க வேண்டும். மூன்று கால் ஒட்டங்கள் அரசுக்கு ஆகாது.

இனிய, நல்ல, பலமுள்ள நாட்டின் நிலைமைகளைச் சீர் செய்யக் கூடிய அரசை அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு தாம் பொறுப்பேற்று அமைக்க இருக்கும் அரசைக் கருவியாகக் கொண்டு வளமான நாடுகாணவும், வேலை வாய்ப்புப் பெருகி வளரவும் தூய்மையான உயர் நோக்குடைய அரசை எந்த அணி அமைக்கும் என்பதை ஆராய்ந்து வாக்குகள் அளிக்க வேண்டும். ஆளும் வேட்கையுடன் முனைப்புடன் தேர்தலில் நிற்பாரை எங்ஙனம் ஆய்ந்தறிவது? தேர்தலில் நிற்பவர்களுடைய சென்ற கால வரலாறுதான் சிறந்த கருவி. சென்ற காலத்தில் அவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? பணம் எவ்வளவு சேர்த்தார்கள்? ஆடம்பரமாகப் பவனி வந்த நிலைமைகள் நாட்டை வீட்டுக்குக் கொண்டு போனார்களா? வீட்டை நாட்டுக்குக் கொண்டு வந்தார்களா? என்று ஆய்வு செய்க! குறிப்பாகச் சென்ற காலத்தில் பதவியில் இருந்திருப்பார்களாயின் அவர்களுடைய நடையினை உய்த்தறிக. இன்று வாக்காளர்களைச் சந்திக்க வருவது எதற்காக? மக்களுக்குத் தொண்டு செய்யவா? அதிகாரத்தைச் சுவைத்து அனுபவிக்கவா? ஆராய்க; கூர்ந்து ஆராய்க! ஆராய்ச்சியின் முடிவில் யார் தேர்தல் மூலம் பெறும் ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கே; மக்கள் நலத்துக்கே பயன்படுத்துவார்கள் என்று யாரிடம் வாக்காளர்களுக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்களிடமே வாக்குச்சீட்டின் மூலம் ஆட்சி அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும். இனிய