பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்றித்து வாழத்தான்! ஆயினும் நாட்டில் நடப்பதென்ன? இன வழிச் சண்டைகள்! சாவுகள்! மொழிவழிப் போட்டிகள்! இச்சண்டைகளால் "மனிதம்” இழக்கப்படுகிறது! மானுடம் அழிக்கப்படுகிறது.

இனிய செல்வ, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் மாந்தரைப் பிரிக்கும் எந்தவொரு கொள்கையும் கூறப்பெறவில்லை; ஒரு சொல் கூட எடுத்தாளப் பெறவில்லை. திருக்குறள் உலகந்தழீஇய ஒப்பமுடைய பொது நூல்! இனிய செல்வ, திருக்குறள் அறிவு உலகந்தழீஇயதாக அமைய வேண்டும்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”

(140)

என்று திருக்குறள் கூறுகிறது. திக்குறள் தமிழ் மரபில் தோன்றியது. உலகந்தழீஇய சிந்தனை பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” என்றார். தொல்காப்பியமும் உலகம் தழுவியது தான். இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் பாவேந்தன் பாரதி தாசனும்,

"நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”

என்று கூறினான். "புவியை நடத்து! பொதுவில் நடந்து!" என்றான். ஆயினும் தமிழகம், திருக்குறள் காட்டிய பொதுமையை ஏற்றுக்கொண்டதா? சாதி, மொழி, மதச்சண்டைகள் மறைந்தனவா? இல்லை, இல்லை! எங்ஙனம் தமிழன் இந்தியனாவான்? உலக மனிதனாவான்?