பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வல்லவர்கள். ஆதலால், ஊழைக் காரணமாகக் கூறினோம். அடுத்த முயற்சியாக "திருக்குறள் தேசியநூல் கருத்தரங்கு” ஒன்றினை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடத்தினார்கள். கட்டுரைகள் திருக்குறளுக்குச் சிறப்புச் செய்தன; தேசியம் தென்படவில்லை; பொதுமை பொதுளவில்லை. இனிய செல்வ, திருக்குறள் திருமறை மார்க்சியம் போல் ஒரு பொது அறநூல் என்பதை உணர்தலிலும் உணர்த்துவதிலும் வெற்றி பெற்றால் தான் மீண்டும் "கர்நாடகம்" நிகழாமல் தவிர்க்கலாம். ஆம்! இன்று கர்நாடக மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை வைக்க மறுக்கின்றனர்; வழக்காடுகின்றனர். ஏன்? இன்னும் இந்தியாவே உருவாக வில்லையே! கர்நாடகம் கர்நாடகம்தான்! கேரளா, கேரளா தான்! காஷ்மீர், காஷ்மீர் தான்! பஞ்சாப் பஞ்சாப்தான்! தமிழ்நாடு தமிழ்நாடு தான்! இந்த வேறுபட்ட நிலையில் கர்நாடகத்தில் ஒரு சிலர் தவறு செய்கின்றனர்; திருவள்ளுவரைத் தமிழராக எண்ணுகின்றனர். திருவள்ளுவர் தமிழராகப் பிறந்தவர் என்பது என்னவோ உண்மை. ஆனால் திருவள்ளுவரோ உலக மனிதராக உயர்ந்தவர். திருக்குறள், பொதுமையே பேசுகிறது! இந்திய மொழிகள் எல்லாம் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடி எடுத்துச் சென்றுள்ளன. கன்னட மொழியும் பல ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளைப் பெற்று விளங்குகின்றது. ஆதலால், கர்நாடக மக்கள் திருவள்ளுவரைத் தமிழராகவோ, திருக்குறளைத் தமிழ் நூலாகவோ எண்ணித் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ அந்நியமாக மாட்டார்கள் என்று நம்புகின்றோம். யாரோ சில "தனிமை வாதிகள்” செய்யும் முயற்சிகள் வெற்றி பெற, கர்நாடக மக்கள் இடம் தரக்கூடாது! தரமாட்டார்கள் என்று நம்புகின்றோம்! கர்நாடக மாநில மக்கள் வரலாற்றுப் போக்கிற்கு ஏற்ப, உலகப்பொதுமறையாகத் திருக்குறளை ஏற்க, திருவள்ளுவரைப் போற்ற முன் வரவேண்டும். இனிய செல்வ,