பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறுக்க முடியும்? சமஸ்கிருத மொழியையே தமிழர் படிக்கக் கூடாது. வேத சாத்திரங்களை, ஆகமங்களைத் தமிழர்கள் படிக்கக் கூடாது என்று தடை இருக்கிறது. இனிய செல்வ, இந்தச் சூழ்நிலையில் சாதி வேறுபாடின்றி ஆதி திராவிடர்கள் உட்பட வேதாகமங்களைப் படிக்க வாய்ப்பளிப்பதும் அவ்வழி அனைவரும் அர்ச்சகராவதும் வரவேற்கத் தக்கவை தானே! இதற்கு ஏன் ஆட்சேபணை? எதற்காக ஆட்சேபணை?

இனிய செல்வ, சமயச்சார்பற்ற அரசு வேதாகமக் கல்லூரி திறக்கலாமா? இஃது ஒரு வினோதமான கேள்வி! இந்துக்களின் திருக்கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை அரசு ஏற்கலாம்! ஆனால், அத்திருக்கோயில்களுடன் பிணைக்கப் பெற்றுள்ள வேதாகமங்களைக் கற்பிக்கும் கல்லூரியை நிறுவக் கூடாதா? இனிய செல்வ, வேதாகமங்கள் தமிழில் மொழி பெயர்த்துக் கற்பிக்கப்படும் என்ற செய்தியை மறு ஆய்வு செய்தல் நல்லது. சில மொழி பெயர்ப்புக்கு உரியனவாகா! பூசை, சடங்குகள் செய்முறை பற்றித்தான் ஆகமங்கள் கூறுகின்றன. ஆகமங்களைத் தழுவிய நிலையில் தமிழிலேயே பூசை, சடங்கு முறைகளை எழுதச் செய்யலாம். இதனால், மொழி பெயர்ப்பில் விளையும் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

இனிய செல்வ, திருக்கோயில் அர்ச்சகர்கள் சாதி முறையில் உயர் குலத்தினரேயன்றி பொருளாதார நிலையில் அப்படி அவர்கள் இல்லை. அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கொள்கைக்குச் செயல் வடிவம் தர, வேதாகமக்கல்லூரி அவசியமான தேவை என்பதே உண்மை! இனிய செல்வ, வேதம், ஆகமம், திருக்கோயில் பூசை இவையெல்லாம் ஒன்றோடொன்று நெருக்கமானவையல்ல. இவைகள் தோன்றிய காலங்கள். தோன்றிய களங்கள். நுதலும் பொருள்கள் ஆகியன வேறு வேறு என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அடிநிலைக் கோட்பாடாகிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு ஒன்றாக்கி