பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருப்பவைகளைக் கற்போம்! கற்பிப்போம்! நமது சிந்தனைப் புலன்கள் திரு நெறிய தமிழில் தோய்ந்து விளக்கமுறுக! நமது அரவணைப்பு உலகந்தழீஇயதாக அமைவதாகுக! ஆம்! வேதாகமக் கல்லூரி வரட்டும்! வேதாகமங்களுடன் நிற்காது திருமுறைகளும், திவ்யப் பிரபந்தங்களும் கற்பிக்கப் பெறும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு, வரவேற்கத்தக்கது.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற திருக்குறள் நெறிவழி எண்ணுக! துணிக!

திருக்குறள் நெறியில் மறைகள் மொழியின் பாற் பட்டன அல்ல. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவையெல்லாம் மறைகளே!

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”

அடுத்து எழுதுகின்றோம்!

இன்ப அன்பு
அடிகளார்
60. கூட்டுடைமைப் பொருளாதாரம்

இனிய செல்வ,

நம்முடைய நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பற்றி நாடு தழுவிய நிலையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் பொதுமக்கள் அதிகம் பங்கேற்காதது ஒரு குறையே! ஆயினும் இடதுசாரி அரசியற் கட்சிகள் கதவடைப்பு வரையில் சென்று மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்றன. எனினும் பொதுமக்கள் போதிய ஆர்வங் காட்டவில்லை. இனிய செல்வ, அது சரி! நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள்? இனிய செல்வ, பொருளாதாரக் கொள்கை என்பது பெரும்பாலும் நான்கு வகையானது என்று குறிப்பிடுவர். அவற்றுள் முதலாவது தனியுடைமை. இரண்டாவது பொதுத்துறை