பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதைவிட, செய்யும் தொழில் சார்ந்த தொழிலாளி மனோ நிலையுமே வளர்ந்து பொது மனப்பான்மையைக் கெடுத்துக் கொண்டு வருகிறது. பொதுத்துறையில் இழப்பு: கூட்டுறவுத் துறையிலும் இழப்பே மிகுதி. இந்த நிலையைக் கண்ட நமது பிரதமர், இழப்பில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறையில் ஒப்படைக்கலாமா என்ற ஓர் ஆலோசனையை மக்கள் மத்தியில் வைத்துள்ளார். இடது சாரி அரசியற் கட்சிகள் தனியார்மயப் படுத்தும் கொள்கையை எதிர்க்கின்றன. ஆயினும் பொதுத்துறையை இழப்பின்றி நடத்தத் தொழிலாளர்களைப் பக்குவப்படுத்தி ஒத்துழைப்புத் தருவதாக உறுதி கூற முன்வர வில்லை. தனியுடைமைக் கொள்கை அமெரிக்காவுக்கு ஒத்து வரலாம். அந்த நாட்டில் மக்கள் தொகை குறைவு. பரப்பளவிலும் இந்தியாவை விட மும்மடங்கு பெரியநாடு. அமெரிக்காவில் ஏழைகள் குறைவு. அது மட்டுமல்ல. அமெரிக்க முதலாளிகள் நாட்டுப் பற்றுடையவர்கள்; நல்லவர்கள். இந்தியா, பரப்பளவில் சிறிய நாடு. மக்கள் தொகை அமெரிக்காவை விட மூன்று மடங்கு கூடுதல். இந்தியாவில் ஏகபோக முதலாளிகள் எண்ணிக்கை குறைவே. நடுத்தர வர்க்கத்தினர் கணிசமான அளவு உளர். இந்தியாவில் ஏழைகளே மிகுதி. ஆதலால், இந்தியாவிற்குத் தனியுடைமைப் பொருளாதாரம் ஒத்துவராது. ஆதலால், பொதுத்துறையையும் கூட்டுடைமையையும் வளர்த்தாக வேண்டும்.

இனிய செல்வ, திருவள்ளுவர் எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கூறுகிறார்? என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! திருவள்ளுவர் பல்வேறு உடைமைகளைக் கூறுகிறார். ஆனால், ‘சொத்துடைமை’ பற்றிக் கூறவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியலில் தான் பொருள் செயல் வகை கூறப்படுகிறது. நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நமக்கு நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும் பாதுகாக்கவும் அனுபவிக்கவும் கடமையும்