பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


62. இந்தியனாகச் சிந்திப்போம்

இனிய செல்வ,

மனிதன் நடுநிலையாளனாக இருத்தல் அரிது. அரிதினும் அரிது. சார்புகளே மனிதனைப் பிடித்தாட்டும் தன்மையன. மனிதனை மனிதனின் ஆன்மாவை, ஆன்மாவின் அறிவுப் புலனை, உணர்வைத் தொட்டு ஆட்டிப் படைக்கும் ஆற்றல் சார்புகளுக்கு உண்டு. இனிய செல்வ, சார்பு என்றால் என்ன? தன்னயப்பு முதற்சார்பு. "தான்” என்ற உணர்வின் அடிப்படையில் தன்னையும் தனது நலன்களையும் முதனிலைப்படுத்தி மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களுடைய உணர்வு எப்பொழுதும் அவர்களைப் பற்றியே வட்டமிடும். அவர்கள் தங்களுடைய விருப்பங்களையே முதன்மைப் படுத்துவர். தங்களுடைய தவறுகள் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டார்கள். யாராவது எடுத்துக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள்; மாறாகக் கோபம் கொள்வார்கள்.

இனிய செல்வ, அடுத்து இனம், சாதி, மொழி, சமயம், கொள்கை, கோட்பாடு, பற்று ஆகியனவும் முறையே சார்புகளாக அமைவது உண்டு. இவையெல்லாமே மனிதனை, மனிதனின் சுதந்திரத்தை, மனிதனின் விரிந்த பரந்த நிறை நிலையைக் குறைப்படுத்துவன சார்புகளேயாம். இனிய செல்வ, அப்படியானால் இவை வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளத் தக்கவையல்லவா என்று கேட்கிறாய்! நல்ல கேள்வி! நாம் இனம், மொழி, சமயச் சார்பின்றி வாழ்தல் வேண்டுமா? வாழ்தல் இயலுமா? ஒருக்காலும் இயலாது. ஆயினும் இவைகளின் மீது நாம் விருப்பங்கொள்ளுதலும் இவற்றை ஏற்றுப் போற்றுதலும் வாழ்க்கையில் கடைப் பிடித்தலும் தவிர்க்க இயலாதன