பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



417


மட்டுமல்ல; கடமையும் கூட! ‘ஒருவன் அவனை நேசித்தல் தவறன்று. ஆனால், அதுபோல மற்றவர்களுக்கும் வாழ உரிமை உண்டு’ என்றும் மற்றவர்களும் வாழ்தல் வேண்டும் என்றும் எண்ணுவது சார்பற்ற நிலை. மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையை அர்ப்பணிப்பது நோன்பு. மற்றவர்கள் நலனுக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிப்பது தியாகம். இது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி. தியாக நிலையை அடைந்த ஆன்மாக்கள் தான் புகழ்பட வாழுவன; புவியை நடத்துவன; இன்ப அன்பு நிலையை எய்துவன. இனிய செல்வ, இது போலத்தான் பிற சார்புகளும் கூட! அவரவர் மொழியைப் போற்ற வேண்டும்; விரும்பிக் கற்க வேண்டும். அது போலவே, மற்றமொழிகளை மதித்து விரும்பிக் கற்க வேண்டும். அம்மொழிகளின் நலன்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டுப் பற்றுக் கூட அளவை மீறும் பொழுது சுரண்டலையும் சண்டைகளையும் தோற்றுவிக்கின்றன. ஆதலால் நாட்டுப்பற்று தேவை. ஆனால் நாட்டுப் பற்று உலகந்தழீஇய உறவுக்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. இது போன்ற நிலைகளில் வளர்வதுதான் சார்பற்ற நிலை.

இனிய செல்வ, காவிரி நீர்ச் சிக்கல் ஏற்பட்டபின் நீ பார்த்த காட்சிகள், நீ கேட்ட செய்திகள் இந்தியா என்றொரு நாட்டினைத் தழுவிய இயல்புக்கு ஏற்றனவாக இருந்தனவா? கவனத்துடன் எண்ணுக. அகில இந்தியக் கட்சிகள் என்ற ஆல வட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியராக எண்ணவில்லை; இந்தியராகப் பேசவில்லை. தமிழ்நாடு; கர்நாடகம் என்ற சார்பு வட்டங்களுக்குள்ளேயே நின்றுதான் பேசினார்கள்; எழுதினார்கள். இனிய செல்வ, கன்னடன், தமிழன் என்ற இனவழிச் சார்புகளே மோலோங்கி நின்றன; இந்தியராக எவரும் நடந்து கொள்ளவில்லை. இவ்வளவு பரந்த நாட்டில்

தி.28.