பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தியராக ஒருவர் கூட வளர்ந்து உயர்ந்து நின்று கன்னடர்களின் எண்ணம், தமிழர்களின் எண்ணம் இவ்விரண்டையும் சீர்துரக்கி ஆய்வு செய்து எழுத வில்லை; பேசவில்லை! இனிய செல்வ, ஏன் நடுவு நிலை ஒழுக்கமாக வளரவில்லை. சார்புகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கும் பழக்கம் வளரவில்லை. ஒரோ வழி சிந்தித்துக் கூறினாலும் மக்கள் மன்றம் ஏற்குமா? இது ஐயப்பாடு! குறுகிய பற்றுக்கள் மூலம் உணர்ச்சியூட்டி மக்களை இயக்குவதன் மூலம் ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்பும் 'தலைவர்கள்’ இன்று மிகுதி, இன்று நாட்டின் தலைவர்களாக யாரையும் காணோம். சாதிகளின் தலைவர்களாக மதங்களின் தலைவர்களாக, மாநிலங்களின் தலைவர்களாக கட்சிகளின் தலைவர்களாகத்தான் பலரும் விளங்குகின்றனர். இது வளரும் சமுதாயத்திற்கு நல்லதன்று. சார்புகள் இருக்கலாம். சார்புகளை வளர்க்கலாம். தவறில்லை. ஆனால் சார்புகள் வழிப்பட்ட நிலையில்தான் எண்ணுவது, சிந்திப்பது செயற்படுவது என்றால் இது மனித குலத்திற்கு நலம் தராது; பயன் தராது; இனிய செல்வ, சார்புகள் காலூன்றி நிற்கும் இடமாகப் பயன்படலாம். ஆனால், சார்புகள் வாழ்க்கையாக மாறி விடுதல் கூடாது. சார்புகள் வழி சிக்கித் தவிக்கும் சமுதாயம் நோய்வாய்ப்படும், வளராது. சிறு சிறு கலகங்களால் சீரழியும். இனிய செல்வ சார்புகளைக் கடந்த நடுநிலை காக்கும் சிலர் இன்று நமக்குத் தேவை. தமிழனாக மட்டுமல்லாமல் இந்தியன் என்ற மனப்பான்மையில் சிந்திக்கும் இயல்பு தேவை. இந்த இயல்பு வளர்ந்தால் இந்தியா இருக்கும். இல்லையென்றால் சோவியத்துக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும்.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தராச் சார்தரும் நோய்!”

இன்ப அன்பு
அடிகளார்