பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பு ஊற்றுக்கண் திறக்க வேறு வாயில்கள் ஏது? ஐயமும் நம்பிக்கையின்மையும் உறவுகளின் வாய்க்கால்களைத் தூர்க்கும் கோரைகள்! நட்புவளரும். துளயநட்பு-அன்பில் விளைந்த நட்பு-அர்ப்பணிப்பில் உறுதியான நட்பு-நாளும் வளரும். எதுபோல வளரும்? பிறை நிலா, முழுநிலாவாக வளர்தல் போல வளரும் என்று கூறுகிறது திருக்குறள், ஆம்; பிறை நிலா குறுகிய கால அளவு! ஒளிக்கற்றையும் குறைவு! நிறைநிலா இரவு முழுவதும் ! ஒளிக்கற்றையும் அதிகம்; நல்ல நண்பன் வாழ்நாள் முழுதும் துணை நிற்பான்; வாழ்வுக்கு ஒளியூட்டுவான்; வளம் சேர்ப்பான்!

"நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு"

என்பது குறள். இனிய செல்வ, நல்ல நூல்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்; கற்கும் தொறும் இன்பந்தரும்; கற்கும் தொறும் அறிவு தரும்; ஆக்கம் தரும்; பண்பினை நல்கும். அதுபோல, நல்ல நண்பன் பழகுதலுக்கு எளியனாக இருப்பான்; பழகுந்தொறும் இன்பமளிப்பான்; இத்தகைய நட்பியல்-தோழமையியல் இன்றைய சமூகத்தில் அருகிப் போய்விட்டது. தேடிப்பார்த்தாலும் இல்லை. இனிய செல்வ, இன்றைய அரசியல், சமூகம் அனைத்துத் துறையிலும் சிறந்த தோழமைப் பண்புள்ளவர்கள் கூட்டாளிகளாகச் சேரவில்லை. எல்லாரும் புகைவண்டிப் பயணமே செய்கின்றனர்; சத்திரங்களிலேயே உண்டு உறங்குகின்றனர். அதனால் வரலாற்றுறுப்புக்களிடையே காரியங்கள் நடைபெறவில்லை. இனிமேலும் நடைபெறுமா? உடன் வருவது யார் என்ற ஐயம் வந்தபிறகு, பயணம் எப்படி நடக்கும்? இன்று நமது நாட்டுக்குத் தேவை கெட்டிக்காரர்கள் அல்ல; சாமர்த்திய சாலிகள் அல்ல. கெட்டிக்காரத்தனமும் சாமர்த்தியமும் எளிதில் அடையலாம். நம்பிக்கைக்குரிய தோழமையுடன் நல்லெண்ணத்தில் தோய்ந்த நட்புடன் தியாகம் செய்பவர்கள் தேவை!